பொள்ளாச்சி ஆனைமலை பகுதியில் 11831 மாணவ மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு
பொள்ளாச்சி ஆனைமலை பகுதியில் 11831 மாணவ மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு;
பொள்ளாச்சி
பொள்ளாச்சி, ஆனைமலை பகுதியில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு 11,831 மாணவ-மாணவிகளுக்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொரோனா தடுப்பூசி
கொரோனா 2-வது அலை முடிந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஒமைக்ரான் பரவல் அதிகரித்து உள்ளது. இதற்கிடையில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக 15 முதல் 18 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து உள்ளன. அதன்படி பொள்ளாச்சி, ஆனைமலை ஒன்றியங்களில் நேற்று முன்தினம் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது.
பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் மாரியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தடுப்பூசி செலுத்தும் பணி நேற்று நடந்தது. நகராட்சி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் இணைந்து மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தினர். மேலும் ஆதார் அட்டை நகலை பெற்று அங்கேயே மாணவிகளுக்கு பதிவு செய்யப்பட்டது. இதேபோன்று ஒன்றிய பகுதிகளில் நேற்று 2-வது நாளாக தடுப்பூசி செலுத்தும் பணி மும்முரமாக நடைபெற்றது. இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
இலக்கு நிர்ணயம்
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் 2007-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந்தேதியை அடிப்படையாக கொண்டு 15 வயது முதல் 18 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் 13 பள்ளிகளில் 4 ஆயிரத்து 200 மாணவ-மாணவிகளுக்கும், தெற்கு ஒன்றியத்தில் 13 பள்ளிகளில் 1166 பேருக்கும், வடக்கில் 9 பள்ளிகளில் 2600 பேருக்கும், ஆனைமலையில் பள்ளிகளில் 3 ஆயிரத்து 865 பேருக்கும் சேர்த்து மொத்தம் 11 ஆயிரத்து 831 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு இலக்கு நிர்யணம் செய்யப்பட்டு உள்ளது.இன்று (நேற்று) பொள்ளாச்சி நகராட்சியில் 300 பேருக்கும், தெற்கில் 408 பேருக்கும், வடக்கில் 1135 பேருக்கும், ஆனைமலையில் 1185 பேருக்கும் கோவேக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. தெற்கு ஒன்றியத்தில் தொண்டாமுத்தூர் பள்ளியில் பெற்றோருடன் வந்து மாணவ-மாணவிகள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். மேலும் தடுப்பூசி செலுத்திய மாணவ-மாணவிகளுக்கு காய்ச்சல் மாத்திரையும் வழங்கப்பட்டு உள்ளது. இன்னும் ஒரு வாரத்திற்குள் 15 வயது முதல் 18 வயது வரை உள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
வால்பாறை
வால்பாறை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளி மற்றும் அரசு உயர்நிலை பள்ளிக்கூடங்களைச் சேர்ந்த 15 வயது முதல் 18 வரையிலான மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் 2-வது நாளாக நடைபெற்றது. இதன்படி வால்பாறையில் உள்ள 4 அரசு மேல்நிலை பள்ளி 4அரசு உயர் நிலை பள்ளி களில் 459 மாணவ -மாணவிகளுக்கு கோவேக்சின் தடுப்பூசி போடப்பட்டது.2 நாட்களும் சேர்த்து வால்பாறையில் 861 மாணவ, மாணவிகள் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். தொடர்ந்து விடுபட்ட மாணவ, மாணவிகளுக்கும் தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதார துறையினர் தெரிவித்தனர்.
சுல்தான்பேட்டை
சுல்தான்பேட்டைஒன்றியம் வா. சந்திராபுரம் மற்றும் சின்ன வதம்பச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட ஜே.கிருஷ்ணாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட 108 மாணவ, மாணவிகள், செஞ்சேரி புத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 84 மாணவ, மாணவிகள், ஜல்லிப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் 24 மாணவ, மாணவிகள் என நேற்று ஒரே நாளில் மொத்தம் 216 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதற்கான பணியில் டாக்டர்கள் சபரி ராம், சூர்யா மற்றும் கார்த்திக்குமார், அப்துல், சந்தோஷ், சத்தியசீலன் அடங்கிய மருத்துவக்குழுவினர் மேற்கொண்டனர். முகாமிற்கான, ஏற்பாடுகளை வட்டார சுகாதார மருத்துவ அலுவலர் டாக்டர் வனிதா, சுகாதார ஆய்வாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் செய்திருந்தனர்.