ஆக்கிரமிப்பு கோவில் நிலத்தை மீட்டு தரக்கோரி பள்ளிப்பட்டில் அரசு பஸ்சை சிறைப்பிடித்த பெண்கள்
ஆக்கிரமிப்பு கோவில் நிலத்தை மீட்டு தரக்கோரி பள்ளிப்பட்டில் அரசு பஸ்சை சிறைப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.;
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா மேளப்பூடி காலனியை சேர்ந்தவர் திருமேனி (வயது 43). இவரது தலைமையில் பெண்கள் நேற்று மேளப்பூடி - சொரக்காய் பேட்டை செல்லும் சாலையில் அம்மன் கோவில் அருகே திடீரென்று சாலை மறியல் செய்தனர். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ்சை சிறைப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் கிடைத்ததும் பொதட்டூர்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் ராக்கி குமாரி சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மேளப்பூடி கிராமத்தைச் சேர்ந்த எத்திராஜலு என்பவர் அங்குள்ள கோவில் நிலத்தை ஆக்கிரமித்து வருவதை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்ததையடுத்து அவர்கள் சாலை மறியலை கைவிட்டனர். இதனால் அந்த பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதில் அனுமதியின்றி சாலை மறியல் செய்த திருமேனி உள்பட 19 பெண்கள் மீது கிராம நிர்வாக அலுவலர் ஹரிபாபு கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.