திருமணமான 3 மாதத்தில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
திருமணமான 3 மாதத்தில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணை நடக்கிறது.
ஆவடி,
ஆவடியை அடுத்த பட்டாபிராம் டிரைவர்ஸ் காலனி 4-வது தெருவை சேர்ந்தவர் அகிலன் (வயது 33). இவர், சென்னை கிண்டியில் உள்ள குடிநீர் வாரியத்தில் தற்காலிக பணியாளராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ரோனிஷா (22). இவர், சென்னை அண்ணாநகரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
இருவரும் உறவினர்கள் என்பதால் இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. ரோனிஷாவின் மாமனார் குணசீலன், வணிகவரி அலுவலகத்தில் வேலை செய்து ஓய்வுபெற்றவர். மாமியார் மீனா, சென்னை எழிலகத்தில் தட்டச்சராக பணியாற்றி வருகிறார்.
நேற்று காலை மாமனார் குணசீலன் அரக்கோணம் சென்றுவிட்டார். கணவர், மாமியார் இருவரும் வேலைக்கு சென்றுவிட்டனர். வீட்டில் தனியாக இருந்த ரோனிஷா, படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து ரோனிஷாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். ரோனிஷாவுக்கு திருமணமாகி 3 மாதங்களே ஆவதால் இதுபற்றி திருவள்ளூர் ஆர்.டி.ஓ விசாரணை நடக்கிறது.