15 வயது முதல் 18 வயதுடைய மாணவ-மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி
ஈரோடு மாவட்டத்தில் 15 வயது முதல் 18 வயதுடைய மாணவ-மாணவிகளுக்கு கொரோனா தடு்ப்பூசி போடும் பணி நேற்று முதல் தொடங்கியது.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் 15 வயது முதல் 18 வயதுடைய மாணவ-மாணவிகளுக்கு கொரோனா தடு்ப்பூசி போடும் பணி நேற்று முதல் தொடங்கியது.
தடுப்பூசி
உலகை தொடர்ந்து அச்சுறுத்தி வரும் கொரேனா டெல்டா, ஒமைக்ரான் என பல்வேறு அவதாரங்களையும் எடுத்து மனித குலத்தை ஆட்டி படைக்கிறது. இந்த தொற்று நோயை தடுக்க தடுப்பூசி ஒன்றே ஆயுதம் என மத்திய, மாநில அரசுகள் அதற்கான பணியில் தீவிரம் காட்டி வருகின்றன.
வயது அடிப்படையில் பல்வேறு கட்டங்களாக தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதன்படி 15 வயது முதல் 18 வயதுடைய மாணவ-மாணவிகளுக்கு நேற்று முதல் தடு்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது.
மிகுந்த கவனத்தோடு...
ஈரோடு மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் மாணவ-மாணவிகளுக்கு கொரோனா தடு்பூசி போடப்பட்டது. சுகாதாரத்துறை பணியாளர்கள், மருத்துவர்கள் மிகுந்த கவனத்தோடு மாணவ-மாணவிகளுக்கு தடுப்பூசி போட்டார்கள். யாருக்காவது ஒவ்வாமை ஏற்பட்டு மயக்கம் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்பட்டாலும் உடனே சிகிச்சை அளிக்க டாக்டர்கள் தயார் நிலையில் இருந்தனர். மாணவ-மாணவிகள் பலர் ஆர்வமுடன் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்கள்.
அந்தியூர்
அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தடுப்பூசி போடும் பணியை ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. தொடங்கிவைத்தார்.
அந்தியூர் வட்டார மருத்துவ அதிகாரி டாக்டர் மோகனவள்ளி. சின்னத்தம்பி பாளையம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர் சக்தி கிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் மருத்துவ பணியாளர்கள் தடுப்பூசிகளை போட்டனர். சுமார் 500 மாணவ-மாணவிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதேபோல் அந்தியூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் மாணவிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
கொடுமுடி- அம்மாபேட்டை
கொடுமுடி எஸ்.எஸ்.வி. மேல்நிலைப் பள்ளியில் 340 மாணவ-மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. வட்டார மருத்துவ அலுவலர் மேகநாதன் தலைமையில் மருத்துவ பணியாளர்கள் மாணவ-மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி போட்டார்கள்.
அம்மாபேட்டை வட்டார ஆரம்ப சுகாதார நிலைய சார்பில், குருவரெட்டியூர், ஆலம்பாளையம், ஒலகடம் ஆகிய மூன்று மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள 15 முதல் 18 வயதுடைய மாணவ, மாணவிகளுக்கு நேற்று கொரனோ தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த மூன்று பள்ளிகளிலும் வட்டார மருத்துவ அலுவலர் அருள்மணி தலைமையிலான மருத்துவ குழுவினர் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
இதேபோல் நேற்று மாவட்டத்தில் பெரும்பாலான மேல்நிலை பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.