ரேஷன் கடைகளில் தயார் நிலையில் உள்ள பொங்கல் பரிசு பொருட்கள்- பொதுமக்களுக்கு இன்று முதல் வழங்கப்படுகிறது
ரேஷன் கடைகளில் தயார் நிலையில் உள்ள பொங்கல் பரிசு பொருட்கள் பொதுமக்களுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வழங்கப்படுகிறது.
ஈரோடு
ரேஷன் கடைகளில் தயார் நிலையில் உள்ள பொங்கல் பரிசு பொருட்கள் பொதுமக்களுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வழங்கப்படுகிறது.
பொங்கல் பரிசு தொகுப்பு
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் தமிழகத்தில் உள்ள ரேஷன் கார்டு தாரர்களுக்கு 21 பொருட்கள் கொண்ட பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அதன்படி பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், ஒரு முழு கரும்பு உள்பட 21 பொருட்கள் வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தை சென்னையில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அதைத்தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.
கரும்பு கட்டுகள்
ஈரோடு மாவட்டத்தில் 7 லட்சத்து 39 ஆயிரத்து 771 அரசி கார்டு தாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் ரேஷன் கார்டுகள் 1,381 என மொத்தம் 7 லட்சத்து 41 ஆயிரத்து 153 ரேஷன் கார்டு தாரர்களுக்கு 21 பொருட்கள் கொண்ட பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது.
இதற்காக கடந்த சில நாட்களாக ரேஷன் கடை பணியாளர்கள் வீடு வீடாக சென்று டோக்கன் வினியோம் செய்தனர். இந்த பணி நேற்றுடன் நிறைவடைந்தது. இந்த நிலையில் அந்தந்த ரேஷன் கடைகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் கரும்பு கட்டுகள் வந்துள்ளன.
முக கவசம்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. அதன்படி ரேஷன் கடைகளில் பொதுமக்கள் கூட்டம் கூடாத வகையில் டோக்கன் அடிப்படையில் ஒவ்வொரு நாளும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.
மேலும் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் ஒவ்வொரு ரேஷன் கடைகளின் முன்பும் வட்டம் போடப்பட்டு உள்ளது. வருகிற 31-ந்தேதி வரை ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்புகளை பொதுமக்கள் பெற்றுக்கொள்ளலாம் என்றும், பொருட்களை வாங்க வரும்போது கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர வேண்டும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.