இரும்பு கம்பியால் தாக்கி பெண் கொலை

பாகல்கோட்டை அருகே குடிபோதையில் இரும்பு கம்பியால் தாக்கி பெண் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது கணவரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.;

Update: 2022-01-03 21:08 GMT
பாகல்கோட்டை:

பெண் கொலை

  பாகல்கோட்டை மாவட்டம் இலகல் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கவிஷெட்டி ஒனி கிராமத்தை சேர்ந்தவர் மெகபூப். இவரது மனைவி மதினா (வயது 27). இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மெகபூப் கூலி வேலை செய்து வந்தார். அவருக்கு மதுஅருந்தும் பழக்கம் இருந்தது. மேலும் குடும்ப பிரச்சினை காரணமாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறும் ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினம் இரவும் மதுஅருந்திவிட்டு குடிபோதையில் மெகபூப் வீட்டுக்கு வந்துள்ளார்.

  அப்போது கணவன், மனைவி இடையே தகராறு உண்டானது. இந்த நிலையில், திடீரென்று ஆத்திரமடைந்த மெகபூப் வீட்டில் கிடந்த இரும்பு கம்பியை எடுத்து மனைவி மதினாவை கண்மூடித்தனமாக தாக்கியதாக தெரிகிறது. இதில், தலையில் பலத்தகாயம் அடைந்து அவர் உயிருக்கு போராடினார். பின்னர் சம்பவ இடத்திலேயே மதினா பரிதாபமாக இறந்து விட்டார்.

கணவருக்கு வலைவீச்சு

  உடனே அங்கிருந்து மெகபூப் தப்பி ஓடிவிட்டார். மதினாவின் குழந்தைகள் அழுவதை கேட்டு அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் ஓடிவந்துள்ளனர். அப்போது மதினா கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்ததும் இலகல் போலீசார் விரைந்து வந்து மதினாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

  அப்போது கணவன், மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினையின் போது, குடிபோதையில் இருந்த மெகபூப், மதினாவை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து இலகல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகிவிட்ட மெகபூப்பை வலைவீசி தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்