மேகதாதுவில் அணை கட்டும் விவகாரம்: கர்நாடக எம்.பி.க்கள், மந்திரிகள் தமிழகத்திற்கு ஆதரவாக உள்ளனர் - சித்தராமையா பரபரப்பு குற்றச்சாட்டு
மேகதாதுவில் அணை கட்டும் விவகாரத்தில் கர்நாடக எம்.பி.க்கள், மந்திரிகள் தமிழகத்திற்கு ஆதரவாக உள்ளனர் என்று சித்தராமையா பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
மைசூரு:
சுப்ரீம் கோர்ட்டு தலையிடாது
மேகதாது அணை திட்ட விவகாரத்தில் பாதயாத்திரை செல்லும் காங்கிரஸ் தொண்டர்கள் பெயர் முன்பதிவு செய்யும் நிகழ்ச்சி நேற்று மைசூருவில் நடந்தது. இதையொட்டி காங்கிரஸ் சார்பில் ஊர்வலம் நடந்தது. இதில் கலந்து கொண்ட முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும்போது கூறியதாவது:-
மேகதாதுவில் அணை கட்ட வேண்டும் என்று வலியுறுத்தி எங்கள் கட்சி சார்பில் வருகிற 9-ந் தேதி பாதயாத்திரை நடக்கிறது. காவிரி நதிநீரை பங்கீடு செய்து கொள்ள அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை வாரியம், சுப்ரீம் கோர்ட்டு மேகதாதுவில் அணை கட்டும் விஷயத்தில் தலையிடாது.
காவிரி மேலாண்மை வாரியத்தின் உத்தரவுப்படி கர்நாடகத்தில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மழை அதிகம் பெய்யும் போது நிர்ணயிக்கப்பட்டதை விட அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கடந்த 2020-ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்டதை விட கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. அதற்கு உரிய ஆவணங்கள் எங்களிடம் உள்ளது.
தமிழகத்திற்கு உரிமை இல்லை
நமது மாநிலத்தில் பெய்யும் மழைநீரை பயன்படுத்தி கொள்ள நமக்கு உரிமை உள்ளது. அரசியலமைப்பு சட்டப்படி கர்நாடகத்தில் அணை கட்டுவதை தடுக்க யாருக்கும் அதிகாரம் இல்லை. மேகதாதுவில் அணை கட்ட எனது தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனை எதிர்த்து தமிழகம் மேல்முறையீடு செய்து உள்ளது. மேகதாது அணை விஷயம் குறித்த வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. ஆனாலும் அணை கட்ட கோர்ட்டு எந்த தடையும் விதிக்கவில்லை.
அரசியல் லாபத்திற்காக தமிழக அரசியல்வாதிகள் மேகதாது திட்டத்தை எதிர்க்கிறார்கள். தமிழகத்திற்கு திறந்து விட வேண்டிய தண்ணீரை நாங்கள் திறப்பதால் கோர்ட்டு அணை கட்டும் விஷயத்தில் தலையிடாது. கோர்ட்டு உத்தரவுப்படி நாங்கள் செயல்படுகிறோம். மேகதாது திட்டத்தை தடுக்க தமிழகத்திற்கு எந்த உரிமையும் இல்லை.
மந்திரிகள் ஆதரவு
மேகதாது விஷயத்தில் தமிழக அரசும், விவசாயிகளும் அமைதியாக உள்ளனர். ஆனால் பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தான் மேகதாது விஷயத்தில் போராட்டம் நடத்துவதாக கூறுகிறார். அவருக்கு பின்னால் சி.டி.ரவி எம்.எல்.ஏ. உள்ளார். கர்நாடக பா.ஜனதா எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மந்திரிகள் தமிழகத்திற்கு ஆதரவாக உள்ளனர்.
அண்ணாமலை மூலம் தமிழகம்-கர்நாடகம் இடையே மனஸ்தாபத்தை ஏற்படுத்த சி.டி.ரவி முயற்சி செய்கிறார். மேகதாதுவில் அணை கட்டினால் 66 டி.எம்.சி. தண்ணீர் சேமிக்க முடியும். அந்த அணை நீரை பெங்களூரு குடிநீர் தேவைக்கு, மின்சார உற்பத்திக்கு பயன்படுத்த முடியாது. கே.ஆர்.எஸ்.சில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறந்து விட முடியாத நிலை உண்டானால் மேகதாதுவில் இருந்து தண்ணீர் திறந்து விட முடியும்.
யாராலும் தடுக்க முடியாது
இந்த திட்டத்தால் 50 வருடங்கள் பெங்களூருவுக்கு குடிநீர் பிரச்சினை இருக்காது. மேகதாது திட்டத்தால் கர்நாடகத்தை விட தமிழகத்திற்கு அதிக லாபம். இந்த அணை திட்டத்திற்கு எந்த இடையூறும் இல்லை. ஆனாலும் செயல்படுத்த அரசு முன்வரவில்லை. மந்திரி கோவிந்த் கார்ஜோள் காங்கிரஸ் ஆட்சியில் நீர்பாசனத்திட்டத்தில் நடந்த தாமதம் குறித்து தன்னிடம் ஆதாரம் இருப்பதாக கூறியுள்ளார்.
அவர் அதை வெளியிட வேண்டும். நாங்களும் அதை எதிர்பார்க்கிறோம். நாங்கள் நடத்தும் பாதயாத்திரையை யாராலும் தடுக்க முடியாது. கொரோனா பரவலை காரணம் காட்டி தடுக்க முயன்றாலும் அஞ்ச மாட்டோம்.
முன்கூட்டியே தேர்தல்
தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் பாதயாத்திரையை நடத்தி காட்டுவோம். மேகதாது நமது உரிமை. அதை விட்டு கொடுக்க மாட்டோம். தமிழ்நாடும் கூட இந்தியாவில் உள்ளது. நமது அண்டை மாநிலம். எல்லாரும் சகோதரர்கள் போல பழக வேண்டும். பா.ஜனதாவில் உள்கட்சி பிரச்சினை உள்ளது. இதனால் சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் வரலாம். ஒருவேளை முன்கூட்டியே தேர்தல் வந்தால் அதை எதிர்க்கொள்ள தயாராக உள்ளோம். நாங்கள் பா.ஜனதா அரசை கவிழ்க்க மாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.