மாரிதாஸ் மீது தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட்டில் மனு
மாரிதாஸ் மீது தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.;
மதுரை,
யூடியூபர் மாரிதாஸ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், “குடியுரிமைச்சட்டம் தொடர்பாக வீடுகளின் வாசலில் கோலம் போட்ட விவகாரம் தொடர்பாக யூடியூப்பில் வீடியோ வெளியிட்டு இருந்தேன். இதில் தி.மு.க.வை களங்கப்படுத்தி, அவதூறு பரப்பும் வகையில் எனது வீடியோ உள்ளது என்றும், இதுசம்பந்தமாக நடவடிக்கை கோரியும் தூத்துக்குடி தி.மு.க. பிரமுகர் உமரிசங்கர் என்பவர், தூத்துக்குடி மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். என் மீது உமரி சங்கர் வழக்கு தொடர முகாந்திரம் இல்லை. எனவே என் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பு வக்கீல் ஆஜராகி, “மனுதாரர் ஒரு அரசியல் விமர்சகர். கருத்து சுதந்திரத்தின்கீழ் அவர் வீடியோ வெளியிட்டுள்ளார். உமரி சங்கர் குறித்து பேசவில்லை. எனவே அவர் மனுதாரருக்கு எதிராக இந்த வழக்கை கோர்ட்டில் தாக்கல் செய்ய முகாந்திரம் இல்லை. அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்” என வாதாடினார்.
விசாரணை முடிவில், இதுகுறித்து பதில் அளிக்க உமரி சங்கருக்கு நோட்டீஸ் அனுப்பும்படி நீதிபதி உத்தரவிட்டார். அடுத்தகட்ட விசாரணையை வருகிற 19-ந்தேதிக்கு ஒத்தி வைத்தார்.