மருமகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நெசவுத்தொழிலாளி அடித்துக்கொலை
மருமகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நெசவுத்தொழிலாளி அடித்துக்கொலை
மேச்சேரி, ஜன.4-
மேச்சேரி அருகே மருமகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நெசவுத்தொழிலாளியை அடித்துக்கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.
இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
நெசவுத்தொழிலாளி
சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள விருதாசம்பட்டி ஊராட்சி கருப்பு கவுண்டர் காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 49). நெசவுத் தொழிலாளி. இவருடைய மனைவி லட்சுமி. இவர்களுக்கு வீரமணி (28), நரசிம்மன் ஆகிய மகன்களும், பாவாயி என்ற மகளும் உள்ளனர்.
இந்த நிலையில் வீரமணி தனது மனைவியுடன், விருதாசம்பட்டியிலும், நரசிம்மன் தனது மனைவியுடன் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டிலும் வசித்து வருகிறார்கள். வீரமணிக்கு குழந்தை இல்லை. மேலும் ராஜேந்திரன் மூத்த மகன் வீரமணியின் வீட்டின் அருகில் வசித்து வந்தார்.
மருமகளுக்கு பாலியல் தொல்லை
இதனிடையே ராஜேந்திரன், தனது மூத்த மகன் வீரமணி இல்லாத நேரத்தில் அவருடைய வீட்டுக்கு சென்று, அங்கு தனியாக இருக்கும் மருமகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதை தனது கணவரிடம், அவர் தெரிவித்துள்ளார். இதை அறிந்த வீரமணி, தனது தந்தையை கண்டித்தார்.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு வீரமணியின் மனைவி, கணவரிடம் உங்களது தந்தை என்னிடம் பாலியல் தொல்லை செய்கிறார். எனவே வேறு இடத்திற்கு சென்று நாம் குடும்பம் நடத்தலாம் எனக் கூறி உள்ளார்.
மேலும் அவர் தனது கணவரிடம் கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதைத்தொடர்ந்து ராஜேந்திரன், தனது மனைவி லட்சுமியுடன், திருச்செங்கோட்டில் உள்ள இளைய மகன் நரசிம்மன் வீட்டுக்கு சென்று விட்டார்.
அடித்துக்கொலை
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு விருதாசம்பட்டி பகுதியில் உள்ள வீட்டில் இருந்த துணிகளை எடுத்துச் செல்ல ராஜேந்திரன் வந்துள்ளார். அப்போது அங்கு இருந்த மகன் வீரமணி, தனது மனைவிக்கு ராஜேந்திரன பாலியல் தொல்லை கொடுத்தது குறித்து தட்டிக்கேட்டார். அப்போது ராேஜந்திரன், மருமகள் குறித்து தகாத வார்த்தைகளால் பேசி உள்ளார்.
இதனால் தந்தை, மகனுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ராஜேந்திரன், தனது மகன் வீரமணியை கொடுவாளால் வெட்ட முயன்றார். உடனே வீரமணி வீட்டின் அருகில் இருந்த சிமெண்டு கல்லை எடுத்து அவரது கால்கள் மீது போட்டார். இதனால் வலியால் அலறித்துடித்த ராஜேந்திரன் மீது, வீரமணி அங்கிருந்த கட்டையால் அவரது தலையில் அடித்ததுடன், அவரை அம்மிக்கல் மீது தள்ளினார்.
இதில் படுகாயம் அடைந்த ராஜேந்திரன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். இதைப்பார்த்த வீரமணி அங்கிருந்து ஓடிவிட்டார். இதனிடையே சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ராஜேந்திரன் உயிரிழந்தார்.
கைது
இது குறித்த தகவல் அறிந்ததும் நங்கவள்ளி போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரமணியை கைது செய்தனர்.
மருமகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால், தந்தையை மகனே அடித்துக்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.