கொடிக்கம்பம் நட்ட பா.ஜனதா கட்சியினர் 94 பேர் கைது
கொடிக்கம்பம் நட்ட பா.ஜனதா கட்சியினர் 94 பேர் கைது
மேச்சேரி, ஜன.4-
ஜலகண்டாபுரத்தில் அனுமதியின்றி கொடிக்கம்பம் நட்ட பா.ஜனதா கட்சியினர் 94 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
கொடிக்கம்பம்
ஜலகண்டாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட துருவத்து எல்லை மாரியம்மன் கோவில் தெருவில் அண்ணா பூங்கா எதிரில் சாலையோரம் ஜலகண்டாபுரம் பா.ஜனதா கட்சியை சேர்ந்த சிலர், கட்சியின் கொடிக்கம்பம் நடுவதற்கு கடந்த 30-ந் தேதி அடித்தளம் அமைத்தனர். மேலும் அதில் ஒரு கம்பத்தையும் நட்டனர். இது குறித்த தகவல் அறிந்த பேரூராட்சி செயல் அலுவலர் குணசேகரன் மற்றும் வருவாய் துறையினர் போலீஸ் பாதுகாப்போடு, அதனை அகற்றினார்கள்.
இந்த நிலையில் நேற்று பா.ஜனதா கட்சியின் சேலம் மேற்கு மாவட்ட தலைவர் சுதிர் முருகன், மாவட்ட பார்வையாளர் கோபிநாத் உள்பட பா.ஜனதா கட்சியினர் ஏராளமாவர்கள் ஜலகண்டாபுரம் பேரூராட்சி அலுவலகம் முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் கொடிக்கம்பம் அகற்றப்பட்ட இடத்திலேயே மீண்டும் நடுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம்
தொடர்ந்து பேரூராட்சி செயல் அலுவலரிடம் மனு கொடுத்தனர். அதற்கு செயல் அலுவலர் குணசேகரன், உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து அனுமதி அளிக்கப்படும் என்றனர். ஆனால் இதனை ஏற்காத பா,ஜனதா கட்சியினர் சேலம் மேற்கு மாவட்ட தலைவர் சுதிர் முருகன் தலைமையில் ஒன்று கூடி, அதே இடத்தில் 15 அடி உயரத்துக்கு பா.ஜனதா கட்சியின் கொடிக்கம்பத்தை நட்டனர்.
இது குறித்து தகவலறிந்த பேரூராட்சி செயல் அலுவலர் குணசேகரன் மற்றும் வருவாய்த்துறையினர், போலீசார் அங்கு நடப்பட்ட கொடிக்கம்பத்தை அகற்றும்படி பா.ஜனதா கட்சியினரிடம் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் கட்சி கொடிக்கம்பத்தை அகற்ற மறுத்ததுடன், போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும், பா.ஜனதா கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
94 பேர் கைது
இதைத்தொடர்ந்து போலீசார், பா.ஜனதா கட்சியினரை குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தனர். சேலம் மேற்கு மாவட்ட தலைவர் சுதிர்முருகன், மாவட்ட பார்வையாளர் கோபிநாத், பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியம் மற்றும் 6 பெண்கள் உள்பட 94 பேர் கைது செய்யப்பட்டனர். ெதாடர்ந்து நடப்பட்ட கொடிக்கம்பம் அகற்றப்பட்டது. பின்னர் கைதானவர்கள் மாலையில் விடுக்கப்பட்டனர்.
இது குறித்து தகவலறிந்து சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபினவ் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து விசாரணை நடத்தினார். தொடர்ந்து ஆவடத்தூர் கிராம நிர்வாக அலுவலர் சதாசிவம் கொடுத்த புகாரின் பேரில் ஜலகண்டாபுரம் போலீசார் பா.ஜனதா கட்சி மேற்கு மாவட்ட தலைவர் சுதிர்முருகன், மாவட்ட பார்வையாளர் கோபிநாத், பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியம் உள்பட பா.ஜனதா கட்சியினர் சிலர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.