பிறந்த வீட்டில் எழுந்தருளிய ஆண்டாள்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பகல்பத்து திருவிழா நேற்று தொடங்கியது. அப்போது பிறந்த வீட்டில் ரெங்கமன்னாருடன் ஆண்டாள் எழுந்தருளினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பகல்பத்து திருவிழா நேற்று தொடங்கியது. அப்போது பிறந்த வீட்டில் ரெங்கமன்னாருடன் ஆண்டாள் எழுந்தருளினார்.
பச்சை காய்கறிகள்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோவிலில் மார்கழி மாதம் மார்கழி நீராட்ட உற்சவம் கோலாகலமாக கொண்டாடப்படும்.
இதன் ஒரு பகுதியாக இந்த ஆண்டு மார்கழி பகல்பத்து திருவிழா நேற்று தொடங்கியது. இந்த திருவிழா 10 நாட்கள் பகல்பத்து மண்டபத்தில் நடைபெறும். இந்த நிகழ்ச்சியையொட்டி ஆண்டாள், ெரங்கமன்னார் நேற்று மாலை 5 மணிக்கு கோவிலில் இருந்து புறப்பட்டு ஆண்டாள் பிறந்த வீடான வேதபிரான் பட்டர் என அழைக்கப்படும் பெரியாழ்வாரின் வீட்டிற்கு வருகை தந்தார்.
அப்போது பச்சை காய்கறிகள் பரப்பி ஆண்டாளுக்கு பிடித்த உணவு பதார்த்தங்களை படைத்து பெரியாழ்வார் குடும்பத்தின் சார்பில் சுதர்சனம் தலைமையில் வரவேற்றனர். அங்கு ஆண்டாள், ரெங்கமன்னாரை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பின்னர் ஆண்டாள், ெரங்கமன்னார் புறப்பட்டு பகல்பத்து மண்டபத்தை வந்தடைந்தனர். இதையடுத்து அரையர் வியாக்கியான நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
எண்ணெய் காப்பு
வருகிற 6-ந் தேதி பிரியாவிடை நிகழ்ச்சி நடைபெறுகிறது. 7-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை ஸ்ரீவில்லிபுத்தூர் திருமுக்குளம் எண்ணெய் காப்பு மண்டபத்தில் வைத்து எண்ணெய் காப்பு மார்கழி நீராட்ட உற்சவம் நடைபெறுகிறது.
13-ந்தேதி காலை 7:35 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நடைபெறுகிறது. 13-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை ராப்பத்து உற்சவம் ராப்பத்து மண்டபத்தில் நடைபெறுகிறது.
திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி இளங்கோவன் ஆகியோர் செய்து வருகின்றனர். மார்கழி நீராட்ட உற்சவத்தை முன்னிட்டு கோவிலுக்கு வரும் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பதோடு, முக கவசம் அணிந்து வர வேண்டும் என கோவில் நிர்வாக அதிகாரி இளங்கோவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.