பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு

குமரி மாவட்டத்தில் 5.64 லட்சம் பேருக்கு பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்புகள் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வினியோகிக்கப்படுகிறது.

Update: 2022-01-03 19:34 GMT
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் 5.64 லட்சம் பேருக்கு பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்புகள் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வினியோகிக்கப்படுகிறது.
பொங்கல் பரிசு தொகுப்பு
தமிழகம் முழுவதும் வருகிற 14-ந் தேதி தைப் பொங்கல் திருநாள் கொண்டாடப்பட இருக்கிறது. இந்த பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடும் விதமாக 21 வகை பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்புகளை அரிசி பெறும் ரேஷன் கார்டுதாரர்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 
அதன்படி இந்த சிறப்பு பரிசுத் தொகுப்புகள் வினியோகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி வைக்கிறார். அதைத்தொடர்ந்து குமரி மாவட்டத்தில் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்புகள் இன்று முதல் வினியோகம் செய்யப்பட உள்ளது.
5½ லட்சம் குடும்ப அட்டை
குமரி மாவட்டத்தில் உள்ள 5 லட்சத்து 63 ஆயிரத்து 937 குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு மாவட்டத்தின் நியாயவிலைக்கடைகள் வாயிலாக 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்புகள் வழங்கப்பட உள்ளது. 
இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து, கலெக்டர் அரவிந்த் துறைசார்ந்த அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டார். இந்த கூட்டத்தில், இணை ஆணையர் (கூட்டுறவுத்துறை) சந்திரசேகரன், நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் மாரிமுத்து உள்பட துறைசார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
புகார்
இதையொட்டி பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற இருக்கும் ரேஷன் கார்டுதாரர்கள் அனைவருக்கும் டோக்கன் வினியோகம் நடந்து வருகிறது. நாள் ஒன்றுக்கு 200 பேருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து ரேஷன் கடைகளுக்கும் 21 வகையான பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ள பொங்கல் சிறப்பு பரிசு பொருட்கள் குறைவான அளவில் இருப்பதாக ரேஷன் கடை ஊழியர்கள் புகார் தெரிவித்தனர். இதுதொடர்பாக தமிழ்நாடு பொதுவினியோக ஊழியர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் குமரி செல்வன் கூறியதாவது:-
குறைவு
ஒவ்வொரு ரேஷன் கடைக்கும் பொங்கல் பரிசு சிறப்பு தொகுப்புகள் 90 சதவீதம்தான் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதுவும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம்தான் பொட்டலமிட்டு தொகுப்புகளாக பையில் போட்டு தரவேண்டும். அதற்காக அவர்களுக்கு பணமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் கூட்டுறவுத்துறை கடைகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களை பொட்டலமிடாமல் மூடை, மூடையாக அனுப்பி வைத்துள்ளனர். இதனால் நாங்கள் நான்கைந்து பேரை பணிக்கு அமர்த்தி பொட்டலமிட வேண்டியது உள்ளது.
இதற்கான பணத்தையும் நாங்கள்தான் கொடுக்க வேண்டியுள்ளது. எனவே பொட்டலமிடுவதற்கான பணத்தை எங்களுக்கு வழங்க வேண்டும். அனுப்பி வைத்துள்ள பொருட்களில் 10 முதல் 15 நபர்களுக்கு உரிய பொருட்களில் ஒருசில பொருட்கள் குறைவாக உள்ளது. இதையும் சரிசெய்து உரிய பொருட்களை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்