‘தினத்தந்தி’ புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
கட்டிட கழிவுகள் அகற்றப்படுமா?
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகர் கால்நடை மருத்துவமனையின் மேற்கு பகுதியில் கட்டிட கழிவுகள் அதிக அளவில் காணப்படுகிறது. முறையான வழிதடம் இல்லாததால் கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் ஏற்பட்டு நோய் பரவும் அபாயமும் உள்ளது. இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். விஷ்வா, ராஜபாளையம்.
நோய் பரவும் அபாயம்
மதுரை மாவட்டம் பாண்டிகோவில் ரிங்ரோட்டின் அருகில் மழை நீர் ஓடும் வாய்க்காலில் குப்பை கழிவுகள் மற்றும் முட்செடிகள் வளர்ந்து புதர் போல் காட்சியளிக்கிறது. மழைநீர் செல்ல வழி இல்லாததால் கழிவுநீர் தேங்கி சுகாதாரமற்ற சூழல் நிலவுகிறது. தேங்கிய கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயமும் உள்ளது. அதிகாரிகள் இதனை சரிசெய்ய நடவடிக்கை எடுத்து மழைநீர் வடிகாலை சரி செய்ய வேண்டும்.
சக்திமுருகன்,மதுரை.
அகற்றப்படாத சிமெண்டு குழாய்கள்
மதுரை வடக்கு தொகுதிக்கு உட்பட்ட 6 மற்றும் 7-வது வார்டு செல்லூர் கண்மாய்கரை ரோட்டில் சிமெண்டு குழாய்கள் பல நாட்களாக அகற்றப்படாமல் உள்ளது. இந்த குழாயின் அருகில் அதிகமான குப்பைகள் கொட்டப்படுவதோடு இப்பகுதி முழுவதும் புதர் மண்டி காணப்படுகிறது. மேலும் விஷபூச்சிகளின் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. இதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் இப்பகுதியினை கடந்து செல்ல அச்சப்படுகின்றனர். அதிகாரிகள் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்
அபுபக்கர், மதுரை.
சாலை வசதி வேண்டும்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கழனிவாசல் 1-வது தெருவில் சரியான சாலை வசதி இல்லை. மழைகாலங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்குவதால் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது. மேலும் இந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், சிவகங்கை.
குப்பை தொட்டி தேவை
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகர் மெயின் ரோட்டில் குப்பை தொட்டி இல்லை. இப்பகுதி மக்கள் சாலையில் குப்பைகளை வீசி செல்வதால் சாலை முழுவதும் குப்பை மேடாக காட்சிஅளிக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. அதிகாரிகள் இதற்கு நடவடிக்கை எடுப்பார்களா?. மதுமிதா,சிவகங்கை.
பொதுமக்களுக்கு இடையூறு
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட காய்கறி மார்க்கெட் மற்றும் நேதாஜி ரோடு நகைக்கடை பஜார் பகுதியில் காய்கறி, பலசரக்கு பொருட்கள் கொண்டுவரும் கனரக வாகனங்கள், லோடு ஆட்டோ, லாரி போன்ற வாகனங்கள் பொதுமக்கள் செல்லும் ரோட்டின் நடுவிலேயே நிறுத்தி விடுகின்றனர். இதனால் காய்கறி, பலசரக்கு போன்ற பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களுக்கு மிகவும் நெருக்கடியாக உள்ளது. சரக்கு இறக்க வரும் வாகனங்களை தனியாக இடம் ஒதுக்கி அதனை நிறுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தேன்கனி, ஸ்ரீவில்லிபுத்தூர்.
கால்நடைகளால் விபத்து அபாயம்
விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலில் உள்ள நாடார் நடுத்தெருவில் கால்நடைகள் அதிக அளவில் ரோட்டில் சுற்றி திரிகின்றன. இதனால் ரோட்டில் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. இரவில் ரோட்டின் நடுவே படுத்து கிடக்கும் இந்த மாடுகளால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. எனவே அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கால்நடை உரிமையாளர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி கால்நடைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், திருத்தங்கல்.
பூங்கா தேவை
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலத்தில் பொதுமக்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் பொழுது போக்க இடம் இல்லாத நிலை உள்ளது. எனவே பெரிய கண்மாய் கரையில் ஒரு சிறிய பூங்கா அமைத்து கரையின் ஓரத்தில் கற்கள் பதித்து பூச்செடிகள் நட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காதர்மீரா, ஆர்.எஸ்.மங்கலம்.