திருவொற்றியூர் பகுதியில் மழைநீரில் மூழ்கி நெற்பயிர் சேதம்

திருவொற்றியூர் பகுதியில் மழைநீரில் மூழ்கி நெற்பயிர் சேதம் அடைந்தன. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Update: 2022-01-03 18:33 GMT
தொண்டி,

திருவொற்றியூர் பகுதியில் மழைநீரில் மூழ்கி நெற்பயிர் சேதம் அடைந்தன. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

மழையில் நெற்பயிர் சேதம்

திருவாடானை தாலுகாவில் 26 ஆயிரத்து 500 ஹெக்டேர் நிலப்பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் திருவொற்றியூர் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக வயல்களில் மழைநீர் தேங்கியது. இதனால் அறுவடைக்கு தயாரான நெற்கதிர்கள் அனைத்தும் கீழே சாய்ந்து கிடக்கின்றன. அந்த நெற்கதிர்கள் தண்ணீரில் மூழ்கி அதை அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். 
இதுகுறித்து இப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-

நிவாரணம் வழங்க கோரிக்கை

 கடந்த ஆண்டு அறுவடை நேரத்தில் மழை பெய்து விவசாயம் பாதித்தது. இந்த ஆண்டு கடந்த மாதத்தில் தொடர் மழை பெய்ததால் மழையால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது. இந்த நிலையில் ஒரளவு தண்ணீர் வடிந்து நெற்கதிர்கள் அறுவடைக்கு தயாரான நிலையில் கடந்த 2 நாட்களாக பெய்த மழையின் காரணமாக நெற்பயிர்கள் கீழே சாய்ந்து விட்டன.மேலும் தண்ணீரில் மூழ்கி பெரிதும் சேதமடைந்துள்ளன. இதனால் ஏக்கருக்கு ரூ.30ஆயிரம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்பை அரசு அதிகாரிகள் பார்வையிட்டு சேதத்தை மதிப்பிட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்தது போல இப்பகுதியிலும் அமைச்சர்கள், வேளாண்மைத்துறை, பயிர் காப்பீட்டுத் துறை ,வருவாய் துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்