மாயமான தொழிலாளி ஆற்றில் பிணமாக மீட்பு
குமாரபுரம் அருகே மாயமான தொழிலாளி ஆற்றில் பிணமாக மீட்கப்பட்டார். அவரது சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பத்மநாபபுரம்:
குமாரபுரம் அருகே மாயமான தொழிலாளி ஆற்றில் பிணமாக மீட்கப்பட்டார். அவரது சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தொழிலாளி
குமாரபுரம் அருகே உள்ள செம்பருத்திவிளை வழிக்கலம்பாடு பகுதியை சேர்ந்தவர் கோலப்பன் (வயது56). இவர் கடந்த 1-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி சரஸ்வதி (54) மற்றும் உறவினர்கள் கோலப்பனை பல இடங்களில் தேடினர். ஆனால், கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் நேற்று முட்டைகாடு அருகே பாறையன்கால் வள்ளியாற்று பாலத்தின் கீழ் ஒரு ஆண் பிணம் மிதப்பதை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் பார்த்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த சரஸ்வதி மற்றும் உறவினர்கள் விரைந்து வந்து பார்த்தனர். அப்போது மாயமான கோலப்பன் ஆற்றில் பிணமாக மிதப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
போலீசார் விசாரணை
இதுபற்றி கொற்றிகோடு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து கொற்றிகோடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில், கோலப்பன் ஆற்றில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது அவரது சாவுக்கு வேறு ஏதாவது காரணம் உண்டா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புத்தாண்டு அன்று மாயமான தொழிலாளி ஆற்றில் பிணமாக மிதந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.