ஆந்திராவில் இருந்து பஸ்சில் கடத்தி வந்த 10 கிலோ கஞ்சா பறிமுதல்
ஆந்திராவில் இருந்து பஸ்சில் 10 கிலோ கஞ்சா கடத்தி வந்த திருமங்கலத்தை சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.;
காட்பாடி
ஆந்திராவில் இருந்து பஸ்சில் 10 கிலோ கஞ்சா கடத்தி வந்த திருமங்கலத்தை சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.
வாகன தணிக்கை
தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு, கூடுதல் டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால், போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு குற்ற புலனாய்வு துறை போலீஸ் சூப்பிரண்டு ரோகித்நாதன் ராஜகோபால் ஆகியோர் ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு கஞ்சா கடத்தி வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர். அதைத் தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு வரும் ஆந்திர தனியார் பஸ்சில் கஞ்சா கடத்தி வருவதாக நேற்று போதைப்பொருள் நுண்ணறிவு குற்றப் புலனாய்வுத் துறை துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவர், இன்ஸ்பெக்டர் உமா மகேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் மோகன், சந்திரசேகரன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் நேற்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
10 கிலோ கஞ்சா பறிமுதல்
அப்போது சித்தூரில் இருந்து தனியார் பஸ் காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை சோதனை சாவடிக்கு வந்தது. அந்த பஸ்சை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அப்போது ஒரு பையில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றின் எடை 10 கிலோ ஆகும். இவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்த திரளி கிராமத்தை சேர்ந்த சீதாராமன் (வயது 59) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் கஞ்சா பொட்டலங்களை ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அடுத்த அனாகபள்ளி கிராமத்தில் இருந்து கடத்தி வந்ததாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக போதைப்பொருள் நுண்ணறிவு குற்ற புலனாய்வுத் துறை போலீசார் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.