முககவசம் அணியாதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை; போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை

முககவசம் அணியாதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2022-01-03 18:21 GMT
கரூர்
கரூர், 
ஒமைக்ரான் வைரஸ்
கொரோனா நோய்பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசால் கொரோனா நோய்த்தடுப்பு கட்டுப்பாடுகள் தற்சமயம் நடைமுறையில் உள்ளது. இந்த வகையில் பரவி வரும் உருமாறிய கொரோனா ஒமைக்ரான் வைரஸ் நோயை கருத்தில் கொண்டு மற்றும் பொதுமக்கள் நலன் கருதியும் நோய்த்தடுப்பு பற்றி தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
மருத்துவ வல்லுனர்களின் அறிவுரைகளின்படி பண்டிகைக் காலங்களில் பொதுமக்கள் ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் அதிகமாக கூடுவதால் கொரோனா நோய்த்தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளதை கருத்தில் கொண்டு கரூர் மாவட்டத்தில் தமிழக அரசின் உத்தரவை பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறது.
சமூக இடைவெளி, முக கவசம்
பொதுமக்கள் வெளியில் செல்லும் போது கட்டாயம் முக கவசம் அணிய கேட்டுக்கொள்ளப்படுகிறது. வணிக நிறுவனங்கள், மளிகைக்கடைகள், மருந்து கடைகள், துணிக்கடைகள் போன்றவற்றில் சமூக இடைவெளி கடைபிடித்தல் மற்றும் முக கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும். கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் வகையில் சானிடைசர் கட்டாயமாக வைக்கப்படுவதோடு, உடல் வெப்ப நிலை பரிசோதனை கருவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும்.
 டெக்ஸ்டைல்ஸ் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களை வாகனங்களில் அழைத்து வரும் போதும், நிறுவனங்களில் வேலை செய்யும் போதும் போதிய சமூக இடைவெளியை கடைபிடிப்பதுடன், அனைவரும் முக கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும்.
சட்டப்படியான நடவடிக்கை
கண்டிப்பாக அரசு வலியுறுத்திய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் தனியார் மற்றும் பொது போக்குவரத்து பஸ்களிலும், மற்ற வாகனங்களிலும் இருக்கையை விட அதிகமாக ஆட்களை ஏற்றிச்செல்லக் கூடாது. பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களில் இருக்கைக்கு மிகாமல் மாணவ, மாணவிகளை அழைத்துச் செல்ல வேண்டும். உணவகங்கள், பேக்கரிகள், தங்கும் விடுதிகள், உறைவிடங்கள், துணிக்கடைகள், நகைக்கடைகள், சினிமா தியேட்டர்கள், உடற்பயிற்சி கூடங்கள், அழகு நிலையங்கள் மற்றும் சலூன் கடைகளில் அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி 50 சதவீதம் வாடிக்கையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். 
சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்கள் மற்றும் முக கவசம் அணியாதவர்கள் மீது காவல்துறை சட்டப்படியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் எச்சரித்துள்ளார்.

மேலும் செய்திகள்