மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜியா? அவரது தம்பியா? முன்னாள் அமைச்சர் தங்கமணி கேள்வி
மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜியா? அவரது தம்பியா? முன்னாள் அமைச்சர் தங்கமணி கேள்வி
பள்ளிபாளையம்:
தமிழக மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜியா? அல்லது அவரது தம்பி அசோக்கா? என முன்னாள் அமைச்சர் தங்கமணி கேள்வி எழுப்பி உள்ளார்.
12 ஆயிரம் மனுக்கள்
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அக்ரஹாரத்தில் உள்ள ஓம்காளி அம்மன் கோவிலில் திருவிழா நடந்து வருகிறது. இந்த கோவிலில் நேற்று முன்னாள் அமைச்சர் தங்கமணி சாமி தரிசனம் செய்தார். இதையடுத்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:- கடந்த காலத்தில் டாஸ்மாக் டெண்டர் வெளிப்படைத்தன்மை இல்லாமல் நடந்தது. தற்போது வெளிப்படை தன்மையாக நடந்துள்ளது. இதில் 12 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன என கூறியுள்ளனர். அதனை கண்டித்து தி.மு.க.வினர் உள்பட பொதுமக்கள் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டிற்கு சென்று முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டதோடு அவருடைய தம்பி அசோக்கை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.
கடந்த காலத்தில் தி.மு.க.வினருக்கும் டாஸ்மாக் பார் கிடைத்தது. ஆனால் தற்போது அவரது கட்சியினரே அவர்களை கண்டித்து கோஷம் எழுப்புகின்றனர். அந்த துறைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜியா? அல்லது அவரது தம்பி அசோக்கா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும். கடந்த மழைக்காலத்தில் மின்சார துறையில் ஏற்பட்ட பாதிப்புகள் உடனுக்குடன் சரி செய்யப்பட்டது. கொளத்தூரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களை அரசு மருத்துவமனையில் சென்று பார்த்து அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிவிட்டு வந்தேன்.
முக்கியமான துறை
ஆனால் தற்போது மழைக்காலத்தில் 3 பேர் மின்சாரம் பாதிப்பினால் இறந்துள்ளனர். ஆனால் அவர்களது வீட்டுக்கு மின்சாரத்துறை அமைச்சர் உள்பட யாரும் சென்று ஆறுதல் கூறவில்லை. மின்சாரத்துறை மிக முக்கியமான துறை ஆகும். அதில் தனி கவனத்துடன் அமைச்சர் செந்தில் பாலாஜி செயல்பட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்துமாறு கேட்டு கொள்கிறேன். மதுக்கடைகளை படிப்படியாக குறைக்கிறேன் என்று கூறிவிட்டு நகரத்தில் கடைகளை திறக்கிறார்கள். அ.தி.மு.க. ஆட்சியில் நகருக்கு வெளிப்புறம் மதுக்கடைகள் இருந்தன. தமிழகத்தில் மதுக்கடைகளை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு மின்சாரத்திற்கு மீட்டர் பொருத்தக்கூடாது என அ.தி.மு.க. ஆட்சியில் தி.மு.க.வினர் தடுத்தனர். தற்போது அவர்கள் மீட்டர் வைத்து கணக்கிட்டு வைத்துள்ளனர். எங்களை மீட்டர் வைக்கக்கூடாது என கூறிவிட்டு தற்போது இவர்கள் மீட்டர் வைத்து ‘லைன் லாஸ்' என கணக்கு எடுத்து வருகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.