மின்கம்பியில் கைவைத்த விவசாயி சாவு

வீட்டுக்கு மின்சாரம் வராததால் மின்கம்பத்தில் ஏறி மின் இணைப்பில் கைவைத்த விவசாயி பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-01-03 18:15 GMT
சாயல்குடி, 

வீட்டுக்கு மின்சாரம் வராததால் மின்கம்பத்தில் ஏறி மின் இணைப்பில் கைவைத்த விவசாயி பரிதாபமாக இறந்தார்.

மின்சாரம் தாக்கி விவசாயி பலி

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே மேலச்செல்வனூர் கிராமத்தை சேர்ந்தவர் சேதுபதி. இவருடைய மகன் சோமசுந்தரம் (வயது 35). விவசாயி. இவருக்கு திருமணம் ஆகவில்லை. 
இந்த நிலையில் அவரது வீட்டில் நேற்று மின்சாரம் இல்லை. இதனால் அவர் மின்கம்பத்தில் தனது வீட்டுக்கு வரும் மின்இணைப்பில் ஏதோ கோளாறு என்று நினைத்து அதை சரி செய்ய அவரே அப்பகுதியில் உள்ள ஒரு டிரான்ஸ்பார்மரை அணைத்து விட்டு மின்கம்பத்தில் ஏறி உள்ளார். 
மின்கம்பத்தில் ஏறிய சோமசுந்தரம், அங்குள்ள மின்கம்பியில் கைவைத்த உடனே மின்சாரம் தாக்கி இறந்தார். அவரது உடல் மின்கம்பத்தின் மீது தொங்கியது.
அந்த கிராமத்தில் 4 டிரான்ஸ்பார்மர்கள் உள்ளன. அதில் அவரது வீட்டுக்கு மின்இணைப்பு வரும் டிரான்ஸ்பார்மருக்கு பதிலாக வேறு ஒரு டிரான்ஸ்பார்மரை அணைத்து விட்டு மின்கம்பத்தில் ஏறியதால் தான் இந்த விபரீத சம்பவம் நேர்ந்து, சோமசுந்தரம் பலியானது தெரியவந்தது.

போலீஸ் விசாரணை

இது குறித்து தகவல் அறிந்ததும் சாயல்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் பொன்னையா தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, மின்கம்பத்தில் தொங்கிய சோமசுந்தரத்தின் உடலை மீட்டனர். கடலாடி இன்ஸ்பெக்டர் ஜான்சிராணி, சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை பரிசோதனைகாக அனுப்பி வைத்தனர். இது குறித்து கடலாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
---------

மேலும் செய்திகள்