முகக்கவசம் அணியாமல் வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை-கலெக்டர் எச்சரிக்கை

பொது இடங்களுக்கு முகக்கவசம் அணியாமல் வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் முருகேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2022-01-03 18:05 GMT
திருவண்ணாமலை

பொது இடங்களுக்கு முகக்கவசம் அணியாமல் வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் முருகேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சிறுவர்களுக்கு தடுப்பூசி

திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளயில் 15 வயது முதல் 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. 

திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள்செல்வம் தலைமை தாங்கினார். துணை இயக்குனர் (சுகாதார பணிகள்) செல்வகுமார் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் வரவேற்றார். 

சிறப்பு அழைப்பாளர்களாக கலெக்டர் முருகேஷ், சி.என்.அண்ணாதுரை எம்.பி. ஆகியோர் கலந்துகொண்டு  தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தனர்.

பின்னர் அவர்கள் பேசுகையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் 15 வயது முதல் 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 

மாவட்டத்தை பொறுத்தவரையில் 91 சதவீத பேருக்கு தடுப்பூசி செலுத்தி இருந்தாலும் கடந்த ஓரிரு நாட்களாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். 

தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும். முகக்கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

கொரோனா தொற்று நடைமுறைகளை பின்பற்றப்படாமல் இருந்தால் அபராதம் வசூலிக்கப்படும். அதுமட்டுமின்றி சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். 

திருவண்ணாமலை மாவட்டத்தில் ‘ஒமைக்ரான்’ பாதித்த 3 நபர்களை கண்டு தொற்று பரவாமல் பாதுகாத்ததால் ‘ஒமைக்ரான்’ அதிகம் பரவாமல் கட்டுக்குள் வந்தது.  மாணவிகள் வீட்டில் இருக்கும் அனைவரிடமும் தடுப்பூசி செலுத்துமாறு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். 

இவ்வாறு அவர்கள் பேசினர்.

முன்னதாக கல்வி உதவிகாட்டி மையம் எண்- 14417, குழந்தைகள் உதவி எண்-1098 அடங்கிய முத்திரையினை பள்ளி மாணவிகளின் புத்தகத்தில் அச்சிட்டு தொடங்கி வைத்தனர். 

திருவண்ணாமலை மாவட்டத்தில் 10-ம் வகுப்பில் 34 ஆயிரத்து 331 மாணவர்களும், 11-ம் வகுப்பில் 30 ஆயிரத்து 880 மாணவர்களும், 12-ம் வகுப்பில் 29 ஆயிரத்து 756 மாணவர்களும் என 94 ஆயிரத்து 967 மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

நிகழ்ச்சியில் திருவண்ணாமலை உதவி கலெக்டர் வெற்றிவேல், தாசில்தார் சுரேஷ், முன்னாள் நகரமன்ற தலைவர் ஸ்ரீதரன், தி.மு.க. நகர செயலாளர் கார்த்திவேல்மாறன், பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் நேரு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்