கொரோனாவால் இறந்தவர்களின் வாரிசுகள் 1240 பேருக்கு கருணைத்தொகை
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் வாரிசுகள் 1240 பேருக்கு கருணைத்தொகை வினியோகம் செய்யப்பட்டு விட்டது என்று கலெக்டர் வினீத் கூறினார்.
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் வாரிசுகள் 1,240 பேருக்கு கருணைத்தொகை வினியோகம் செய்யப்பட்டு விட்டது என்று கலெக்டர் வினீத் கூறினார்.
1,240 பேருக்கு கருணைத்தொகை
திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கொரோனாவால் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு தமிழக அரசு மாநில பேரிடர் தணிப்பு நிதியில் இருந்து ரூ.50 ஆயிரம் கருணைத்தொகை வழங்குகிறது. இந்த தொகையை வழங்கக்கோரி திருப்பூர் மாவட்டத்தில் 1,578 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் 1,240 பேருக்கு கருணை தொகை மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் 70 விண்ணப்பங்கள் வெளிமாவட்டங்களை சேர்ந்தவை என்பதால் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
73 விண்ணப்பங்களில் வாரிசு மற்றும் சட்டப்பிரச்சினைகளாலும், 1 விண்ணப்பம் வேறுமாநிலத்தை சேர்ந்தது என்பதாலும் கருணை தொகை வழங்கப்படவில்லை. 70 விண்ணப்பங்களில் முகவரி மற்றும் செல்போன் எண்கள் முழுமையாக இல்லாததால் தொடர்பு கொள்ள முடியாத நிலை உள்ளது. மீதம் உள்ள 18 விண்ணப்பங்களில் முழுமையான மருத்துவ ஆவணங்கள் இல்லை. 47 விண்ணப்பங்கள் இறப்பு சான்று, வாரிசு சான்று உள்ளிட்ட ஆவணங்கள் விடுபட்டுள்ளதால் சரிபார்ப்புக்காக சம்பந்தப்பட்ட தாசில்தார் அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
தாசில்தார் அலுவலகம்
இந்த விண்ணப்பதாரரின் விவரங்கள் விரைவில் மாவட்ட இணையதள பக்கத்தில் (tiruppur.nic.in) பதிவேற்றம் செய்யப்படும். இதை வருகிற 7-ந் தேதி முதல் பொதுமக்கள் பார்வையிடலாம். இதுவரை விண்ணப்பம் சமர்ப்பிக்காத தகுதியான நபர்கள் கொரோனா பரிசோதனை சான்று, சிகிச்சை ஆவணங்கள், இறப்பு சான்று, வாரிசு சான்று, வங்கி கணக்கு புத்தகத்தின் நகல் மற்றும் ஆதார் அட்டை ஆகிய ஆவணங்களில் சுய சான்றொப்பமிட்டு திருப்பூர் மாவட்ட பேரிடர் மேலாண்மை பிரிவு அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம். தாசில்தார் அலுவலகங்களிலும் விண்ணப்பத்தை தாக்கல் செய்து ரூ.50 ஆயிரம் கருணைத்தொகை பெறலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கலெக்டர் தெரிவித்துள்ளார்.