அரசு பள்ளியில் மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி
விழுப்புரம் பகுதி அரசு பள்ளியில் மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை கலெக்டர் மோகன் தொடங்கி வைத்தார்.;
விழுப்புரம்,
கொரோனா பரவலை தடுக்க 15 முதல் 18 வயது வரை உள்ள சிறுவர்- சிறுமிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தமிழகம் முழுவதும் நேற்று தொடங்கியது. அதன்படி தமிழக அரசின் வழிகாட்டுதலின் பேரில் விழுப்புரம் மாவட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளில் படிக்கும் 15 வயது முதல் 18 வயது வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கும், 2007-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதிக்கு முன் பிறந்தவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியானது தொடங்கியது.
விழுப்புரம் அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளி, கோலியனூர் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட தகுதியுள்ள மாணவ- மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை மாவட்ட கலெக்டர் டி.மோகன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-
ஆர்வமுடன் முன்வர வேண்டும்
விழுப்புரம் மாவட்டத்தில் 15 வயது முதல் 18 வயது வரை உள்ள அதாவது 2007-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதிக்கு முன் பிறந்தவர்களுக்கு கோவின் செயலி மூலம் பள்ளியில் வழங்கப்பட்ட அடையாள அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றை பயன்படுத்தி முன்பதிவு செய்யும் பணி தொடங்கப்பட்டு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் அரசு, நகராட்சி, நிதி உதவி, ஆதிதிராவிடர் நலம், சுயநிதி, மெட்ரிக், சி.பி.எஸ்.இ. என 187 உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் 205 மேல்நிலைப்பள்ளிகள் ஆக மொத்தம் 392 பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகள் உள்பட 15 வயது முதல் 18 வயது வரை உள்ள 28,414 சிறுவர்கள், 26,404 சிறுமிகள் என மொத்தம் 54,818 பேருக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை சுகாதாரத்துறை, பள்ளிக்கல்வித்துறை இணைந்து மேற்கொண்டு வருகிறது. மேலும் மாணவ- மாணவிகள் பெற்றோர் சம்மதத்துடன் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆர்வமுடன் முன்வர வேண்டும். தடுப்பூசி செலுத்திக்கொண்ட மாணவர்கள் மற்ற மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் தடுப்பூசி செலுத்திக்கொள்வதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கொரோனா மற்றும் ஒமைக்ரான் போன்ற வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள 15 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இம்முகாமில் விழுப்புரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஆர்.லட்சுமணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா, சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் பொற்கொடி, நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்.