மாற்று இடம் கேட்டு கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
சாலை விரிவாக்க பணிக்காக வீடுகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறையினர் முடிவு செய்துள்ளதால் மாற்று இடம் கேட்டு கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
விழுப்புரம்,
விழுப்புரம்- மாம்பழப்பட்டு- திருக்கோவிலூர் இடையே 45 கி.மீ. தூரமுள்ள சாலையில் இருபுறமும் விரிவாக்கப்பணிகள் நடந்து வருகிறது. இதற்காக விழுப்புரம் அருகே தோகைப்பாடி கிராமத்தில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் வசித்து வரும் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு வீடுகளை காலி செய்ய சொல்லி கடந்த 10 நாட்களுக்கு முன்பு அதிகாரிகள் நோட்டீசு அனுப்பியுள்ளனர்.
இந்நிலையில் தோகைப்பாடி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து அங்குள்ள நுழைவுவாயிலை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே அவர்களிடம் விழுப்புரம் தாலுகா போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள், மாவட்ட கலெக்டர் மோகனிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
தோகைப்பாடியில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறோம். நாங்கள் முறையாக வீட்டு வரி, குடிநீர் வரி, மின் கட்டணம் செலுத்தி வருகிறோம். இந்த சூழலில் சாலை விரிவாக்க பணிக்காக எங்களது வீடுகளை காலி செய்யுமாறு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறி வருகின்றனர்.
எங்களுக்கு இந்த இடத்தை விட்டால் வேறு எங்கும் வீடோ, மனையோ கிடையாது. நாங்கள் அனைவரும் அன்றாடம் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறோம். எனவே நாங்கள் குடியிருக்க மாற்று இடம் ஒதுக்கிவிட்டு அதன் பிறகு எங்களது வீடுகளை காலி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். எங்களுக்கு மாற்று இடம் வழங்க மாவட்ட கலெக்டர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர். மனுவை பெற்ற கலெக்டர், இதுகுறித்து பரிசீலனை செய்வதாக கூறினார். அதன் பிறகு அவர்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.