மோட்டார் சைக்கிள்களை திருடிய சிறுவன் உள்பட 2 பேர் கைது

நாகையில் மோட்டார் சைக்கிள்களை திருடிய சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் ஜி.பி.எஸ். கருவி மூலம் சிக்கினர்.

Update: 2022-01-03 17:40 GMT
வெளிப்பாளையம்:
நாகையில் மோட்டார் சைக்கிள்களை திருடிய சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் ஜி.பி.எஸ். கருவி மூலம் சிக்கினர்.
மோட்டார் சைக்கிள் திருட்டு
நாகை நகராட்சிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் தொடர்ந்து மோட்டார் சைக்கிள்கள், கால்நடைகள் திருட்டு போவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன.இந்த நிலையில் வெளிப்பாளையம் பகுதியை சேர்ந்த பல் டாக்டர்  ஒருவர் புதிய பஸ் நிலையம் அருகே நிறுத்தியிருந்த  தனது மோட்டார் சைக்கிளை காணவில்லை எனவும், அந்த மோட்டார் சைக்கிளில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டு உள்ளதாகவும் வெளிப்பாளையம் போலீசில் புகார் கொடுத்தார்.
பின்னர் அவர் தனது மோட்டார் சைக்கிளில் பொருத்தப்பட்டுள்ள ஜி.பி.எஸ். கருவியின் சிக்னல் எங்கு உள்ளது என  ஆய்வு செய்துள்ளார். அப்போது அந்த ஜி.பி.எஸ். கருவி நாகை நாடார் தெருவில் இருப்பதாக காட்டி உள்ளது. இதை தொடர்ந்து அவர்,  தனது நண்பர்களுடன் அங்கு சென்றுள்ளார். இதுகுறித்து  வெளிப்பாளையம் போலீசாருக்கும் தகவல் கொடுத்துள்ளார்.
குடோனில் பதுக்கி வைப்பு
 அதன்பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து சோதனை செய்தனர். இதில் அந்த பகுதியில்  தண்ணீர் பாட்டில்கள் விற்பனை செய்யும் குடோனில் மோட்டார் சைக்கிள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. பின்னர் அந்த குடோனை திறந்து பார்த்த போது டாக்டரின் மோட்டார் சைக்கிளை தவிர மேலும் 7 மோட்டார் சைக்கிள்களும், 8 கோழி குஞ்சுகள் , 4 ஆடுகள் இருந்துள்ளன. மேலும் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்தன. இதை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் தண்ணீர் பாட்டில்கள் விற்பனை செய்து வருபவரிடம் வேலை பார்த்து வரும் செல்லூர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த ஜென்சன்(24) மற்றும் 17 வயது  சிறுவன் ஆகிய 2 பேரும்  இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிள் மற்றும் ஆடு, கோழிகளை திருடி வந்து இந்த குடோனில் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. 
2 பேர் கைது
இதை தொடர்ந்து ஜென்சன் மற்றும் சிறுவன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து  8 மோட்டார் சைக்கிள் மற்றும் ஆடு, கோழி குஞ்சுகள், அரிவாள், கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். 
 கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை மறைத்து வைத்துள்ளதால் இவர்களுக்கு வேறு வழக்குகளில்  தொடர்பு உள்ளதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்