இன்று முதல் பொங்கல் பரிசுத்தொகுப்பு பொருட்கள் வினியோகம்

உடுமலையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வினியோகிப்பதற்காக நேற்று ரேஷன் கடைகளுக்கு கரும்புகள் அனுப்பிவைக்கப்பட்டன. ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று, பொங்கல் பரிசுத்தொகுப்பு பெறுவதற்கான டோக்கன்களை குடும்ப அட்டைதாரர்களிடம் வழங்கினர்.

Update: 2022-01-03 17:20 GMT
உடுமலை
உடுமலையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வினியோகிப்பதற்காக நேற்று ரேஷன் கடைகளுக்கு கரும்புகள் அனுப்பிவைக்கப்பட்டன. ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று, பொங்கல் பரிசுத்தொகுப்பு பெறுவதற்கான டோக்கன்களை குடும்ப அட்டைதாரர்களிடம் வழங்கினர்.
பொங்கல் பரிசுத்தொகுப்பு
தமிழக அரசு, பொங்கல் பண்டிகையொட்டி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, வெல்லம், ரவை, கரும்பு, உள்ளிட்ட 21 வகையான பொங்கல்பரிசுத் தொகுப்பு பொருட்களை வழங்குகிறது. உடுமலை மடத்துக்குளம், குடிமங்கலம் ஆகிய வட்டாரங்களில் உள்ள ரேஷன்கடைகளுக்கு கரும்பு தவிர மற்ற பொருட்கள் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் கரும்பு வெளியூர்களில் இருந்து லாரிகள் மூலமாக நேற்று உடுமலை திருப்பூர் சாலையில் உள்ள உடுமலை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க குடோன் மற்றும் குடிமங்கலம் ஆகிய இடங்களுக்கு வந்து சேர்ந்தது. பின்னர் அவை அங்கிருந்து அந்தந்த ரேஷன் கடைகளுக்கு வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த பணிகள் உடுமலை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மேலாண்மை இயக்குனர் தமிழரசு, பொது மேலாளர் ரவி, கள அலுவலர்கள் அப்துல்கபார் (உடுமலை), மாரிமுத்து (மடத்துக்குளம்), ஆனந்தகுமார் (குடிமங்கலம்), பொது வினியோக திட்ட கள அலுவலர் (குடிமங்கலம்) சண்முகசுந்தரம் ஆகியோர் மேற்பார்வையில் நடந்தது.
இன்று முதல் வினியோகம்
உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஆகிய 3 வட்டாரங்களிலும் சேர்த்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மொத்தம் 1 லட்சத்து 45 ஆயிரத்து 96 பேர் உள்ளனர். இந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு அந்தந்த ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசுத்தொகுப்பு பொருட்கள் வினியோகிக்கப்பட உள்ளது.
உடுமலையில் ஒவ்வொரு ரேஷன் கடையிலும் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல், நாள் ஒன்றுக்கு 200 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல்பரிசுத் தொகுப்பு பொருட்களை வினியோகிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. 
இதற்கான டோக்கன்களை ரேஷன் கடை ஊழியர்கள் நேற்று வீடு, வீடாக சென்று குடும்ப அட்டைதாரர்களிடம் வழங்கினர்.
அந்த டோக்கன்களில் பொங்கல் பரிசுத்தொகுப்பு பொருட்கள், அந்தந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் தேதி, நேரம் மற்றும் டோக்கன் எண் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்