பணம் மோசடி வழக்கில் ஒருவர் கைது

திருக்கோவிலூர் அருகே பணம் மோசடி வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2022-01-03 17:20 GMT
விழுப்புரம், 

திருக்கோவிலூர் அடுத்த கண்டாச்சிபுரம் அருகே  டி.தேவனூரை சேர்ந்தவர் மணிவண்ணன் மகன் அய்யப்பன் (வயது 38). இவரிடம் திருக்கோவிலூர் கீழையூரை சேர்ந்த ராமு (40), அவரது தம்பி ஜெயக்குமார் (38) ஆகியோர் சென்று தொழில் செய்வதற்காகவும், வீடு கட்டுவதற்காகவும் மற்றும் குடும்ப செலவிற்காகவும் கடந்த 2012-ம் ஆண்டு கடன் கேட்டனர். அதற்கு அய்யப்பன் தனக்கு தெரிந்த சிலரிடம் பணம் பெற்று ராமு, ஜெயக்குமார் ஆகிய இருவருக்கும் ரூ.12 லட்சத்து 20 ஆயிரத்தை கொடுத்தார். பணத்தை பெற்ற அவர்கள் இருவரும் அந்த பணத்தை மீண்டும் அய்யப்பனுக்கு திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி மோசடி செய்து விட்டனர். 

கைது

இதுகுறித்து அய்யப்பன், கடந்த 2020-ம் ஆண்டு விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமு, ஜெயக்குமார் ஆகிய இருவரையும் வலைவீசி தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று ராமுவை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டுகள் இருதயராஜ், ரவீந்திரன் ஆகியோர் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாத்துரை தலைமையிலான போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். பின்னர் ராமுவை திருக்கோவிலூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி விழுப்புரம் வேடம்பட்டில் உள்ள சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்