தர்மபுரி பஸ் நிலையங்களில் திருட்டு சம்பவங்களை தடுக்க 41 கண்காணிப்பு கேமராக்கள் கட்டுப்பாட்டு அறையை போலீஸ் சூப்பிரண்டு திறந்து வைத்தார்
தர்மபுரி பஸ் நிலையங்களில் திருட்டு மற்றும் குற்ற சம்பவங்களை தடுக்க 41 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கான கட்டுப்பாட்டு அறையை போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் திறந்து வைத்தார்.
தர்மபுரி:
தர்மபுரி பஸ் நிலையங்களில் திருட்டு மற்றும் குற்ற சம்பவங்களை தடுக்க 41 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கான கட்டுப்பாட்டு அறையை போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் திறந்து வைத்தார்.
குற்ற சம்பவங்கள்
தர்மபுரி புறநகர், டவுன் பஸ் நிலையங்கள் மற்றும் சுற்றி உள்ள சாலைகளில் திருட்டு, குற்ற சம்பவங்களை தடுக்க பொதுமக்கள் பங்களிப்புடன் 41 நவீன கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகளை கண்காணிக்க தர்மபுரி புறநகர் பஸ் நிலையத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டுப்பாட்டு அறையை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் திறந்து வைத்து, கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகளை தொடங்கி வைத்து பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் துணை போலீஸ் சூப்பிரண்டு வினோத், தர்மபுரி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் நவாஸ், சப்-இன்ஸ்பெக்டர்கள், போக்குவரத்து பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் வணிகர் சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் போலீஸ் சூப்பிரண்டு கூறியதாவது:-
பீட் ஆபீசர் சிஸ்டம்
தர்மபுரி நகரில் திருட்டு சம்பவம் மற்றும் குற்ற செயல்களை கண்காணிக்க நவீன கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தர்மபுரி புறநகர் மற்றும் டவுன் பஸ் நிலையங்களில் தற்போது 41 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த காவல் கட்டுப்பாட்டு அறையில் 24 மணி நேரமும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். இதன் மூலம் பஸ் நிலையம் மற்றும் அதனை சுற்றி உள்ள சாலைகளில் நடைபெறும் ஜேப்படி, திருட்டு, லாட்டரி விற்பனை மற்றும் விபசாரம் ஆகிய குற்றங்கள் தடுக்கப்படும்.
கடந்த ஒரு மாத காலமாக தர்மபுரி பஸ் நிலையங்களில் சுற்றியுள்ள பகுதிகளில் நவீன வாக்கி டாக்கி யுடன் கூடிய "பீட் ஆபீசர் சிஸ்டம்" அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் குற்ற சம்பவங்கள் வெகுவாக குறைந்துள்ளன. எனவே வணிக நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அந்தந்த பகுதியை சேர்ந்தவர்கள் நவீன கண்காணிப்பு கேமராக்களை அமைக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.