தர்மபுரி மாவட்டத்தில் 15 முதல் 18 வயது வரை உள்ள 69 ஆயிரம் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை பணியை தொடங்கி வைத்து கலெக்டர் தகவல்
தர்மபுரி மாவட்டத்தில் 15 முதல் 18 வயது வரை உள்ள 69 ஆயிரம் மாணவர்களுக்கு அவரவர் பயிலும் பள்ளிகளிலேயே தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்கி வைத்து கலெக்டர் திவ்யதர்சினி தெரிவித்தார்.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் 15 முதல் 18 வயது வரை உள்ள 69 ஆயிரம் மாணவர்களுக்கு அவரவர் பயிலும் பள்ளிகளிலேயே தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்கி வைத்து கலெக்டர் திவ்யதர்சினி தெரிவித்தார்.
தடுப்பூசி செலுத்தும் பணி
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னையில் 15 முதல் 18 வயது வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை நேற்று தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக தர்மபுரி மாவட்டத்தில் 15 வயது முதல் 18 வயது வரை உள்ள மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தொடங்கியது. தர்மபுரி அருகே சோலைக்கொட்டாய் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது. இந்த பணியை கலெக்டர் திவ்யதர்சினி தொடங்கி வைத்தார். செந்தில்குமார் எம்.பி., கோவிந்தசாமி எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து கலெக்டர் பேசியதாவது:-
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக தர்மபுரி மாவட்டத்தில் முதல் மற்றும் 2-வது தவணை தடுப்பூசி 14 லட்சத்து 59 ஆயிரத்து 775 பேருக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 75 சதவீதத்திற்கு மேல் முதல் தவணை மற்றும் 46 சதவீதத்திற்கு மேல் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சிறப்பு முகாம்கள் மூலம் தினமும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
பள்ளிகளிலேயே...
தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைத்தொடர்ந்து தர்மபுரி மாவட்டத்தில் 15 முதல் 18 வயது வரை உள்ள 69 ஆயிரத்து 500 மாணவர்களுக்கு அவரவர் பயிலும் பள்ளிகளிலேயே தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. 31.12.2007-க்கு முன் பிறந்த அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம். எனவே பெற்றோர்கள் அனைவரும் தயக்கமின்றி தங்களது குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தி கொள்ள முன்வர வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் வைத்திநாதன், மருத்துவ பணிகள் இணை இயக்குனர் மலர்விழி வள்ளல், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் சவுண்டம்மாள், முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி, ஒன்றிய குழுத்தலைவர் நீலாபுரம் செல்வம், தாசில்தார் ராஜராஜன், தலைமை ஆசிரியர் ராஜா அண்ணாமலை, ஊராட்சி மன்றத்தலைவர் லட்சுமி காவேரி, டாக்டர்கள் தனசேகரன், தேவி மற்றும் அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.