ஜாமீனில் இருக்கும் 2 பேர் விசாரணைக்கு ஆஜராக உத்தரவு
ஜாமீனில் இருக்கும் 2 பேர் விசாரணைக்கு ஆஜராக உத்தரவு
ஊட்டி
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஜாமீனில் இருக்கும் 2 பேரை விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டு உள்ளது. அதுபோன்று சிறையில் இருக்கும் கனகராஜ் அண்ணன் உள்பட 2 பேருக்கு காவல் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
கோடநாடு வழக்கு
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் 24.4.2017-ந் தேதி காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். மேலும் எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக கேரளாவை சேர்ந்த சயான், மனோஜ், திபு, சதீசன், சம்சீர் அலி, பிஜின், சந்தோஷ் சாமி, மனோஜ்சாமி, ஜித்தின்ஜாய், உதய குமார் ஆகிய 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கு குறித்து முழு விசாரணை நடத்த 5 தனிப்படைகள் அமைக்கப் பட்டன.
2 பேர் கோர்ட்டில் ஆஜர்
அதில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தடயங்களை அழித்ததாக கனகராஜின் அண்ணன் தனபால், நெருங்கிய உறவினர் ரமேஷ் ஆகிய 2 பேரை கடந்த அக்டோபர் 25-ந் தேதி போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் கூடலூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்றுடன் 2 பேருக்கும் நீதிமன்ற காவல் முடிந்தது.
இதையடுத்து தனபால், ரமேஷ் ஆகிய 2 பேரை போலீசார் கூடலூர் கிளை சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் அழைத்து வந்து ஊட்டி கோர்ட்டில் நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதரன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அவர்களுக்கு மேலும் 2 வாரம் நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் 2 பேரையும் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்று கூடலூர் சிறையில் அடைத்தனர்.
இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:-
2 பேரை ஆஜராக உத்தரவு
கோடநாடு வழக்கு தொடர்பாக 150-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. மேலும் இந்த வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இ்ந்த வழக்கில் கைதாகி ஜாமீனில் இருக்கும் ஜித்தின்ஜாய், உதயகுமார் ஆகியோரிடம் மீண்டும் விசாரணை நடத்த முடிவு செய்து உள்ளோம்.
எனவே வருகிற 7-ந் தேதி ஜித்தின்ஜாய், 8-ந் தேதி உதயகுமார் ஆகியோரை விசாரணைக்காக கோவையில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்துக்கு வரும்படி உத்தரவிடப்பட்டு உள்ளது. அவரிடம் அங்கு விசாரணை நடத்த உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.