நீலகிரி மாவட்டத்தில் 2¼ லட்சம் பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு
நீலகிரி மாவட்டத்தில் 2¼ லட்சம் பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு;
கூடலூர்
நீலகிரி மாவட்டத்தில் 2¼ லட்சம் பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு இன்று முதல் வழங்கப்படுகிறது.
பொங்கல் பரிசு தொகுப்பு
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி வாங்கும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 2 லட்சத்து 20 ஆயிரத்து 976 ரேஷன் காா்டுகள் உள்ளன.
இந்த கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு, கரும்புகள் வழங்குவதற்கான பணிகள் ரேஷன் கடைகளில் தொடங்கப்பட்டு உள்ளது. இதற்காக நுகர்பொருள் வாணிப கழக குடோன்களில் பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதை ரேஷன் கடை பணியாளர்கள், ஊழியர்கள் பெற்றுக்கொண்டு தங்களது கடைகளில் வைத்து பரிசு தொகுப்பு பொருட்களை பைகளில் நிரப்பி வருகின்றனர்.
இன்று முதல் வினியோகம்
இதேபோல் சமவெளிப் பகுதியில் கொள்முதல் செய்யப்பட்ட கரும்புகள் லாரிகளில் நீலகிரி மாவட்டத்திற்கு கொண்டுவரும் பணியும் தொடங்கப் பட்டு உள்ளது. தொடர்ந்து ரேஷன் கடைகளில் கரும்புகள் இருப்பு வைக்கும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்த பரிசு தொகுப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் தொடங்கப்பட உள்ளதாலும், அதற்கான முன்னேற்பாடுகள் நடந்து வருவதாலும், வழக்கம் போல் வழங்கப்படும் அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் வழங்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து வழங்கல்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
2¼ லட்சம் பேர்
நீலகிரியில் 2 லட்சத்து 20 ஆயிரத்து 976 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு பைகள், கரும்புகள் வழங்குவதற்கான பணி தொடங்கப்பட்டு உள்ளது. சென்னையில் இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்ததும், தொடர்ந்து ரேஷன் கடைகளில் வழங்கப்படும்.
தற்போது கொரோனா பரவல் உள்ளதால் இக்காலகட்டத்தில் அரசின் வழிகாட்டி நெறிமுறைகளை கண்டிப்பாக அனைவரும் பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.