24449 மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி
24449 மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி
ஊட்டி
நீலகிரியில் 212 பள்ளிகளில் 24 ஆயிரத்து 449 மாணவர்களுக்கு 90 குழுக்கள் மூலம் தடுப்பூசி செலுத்தும் பணியை கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்தார்.
தடுப்பூசி சிறப்பு முகாம்
நீலகிரி மாவட்டம் ஊட்டி பிரிக்ஸ் பள்ளியில் 15 வயது முதல் 18 வயது வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு தடுப்பூசி சிறப்பு முகாம் நேற்று தொடங்கியது. முகாமை கலெக்டர் எஸ்.பி.அம்ரித் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
பின்னர் அவர் பேசும்போது, பள்ளி மாணவ-மாணவிகள் தடுப்பூசி செலுத்தி கொண்டாலும், கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். பள்ளி யில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றார். தொடர்ந்து கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:-
90 குழுக்கள்
நீலகிரி மாவட்டத்தில் 212 பள்ளிகளில் 15 வயது முதல் 18 வயது வரை 24 ஆயிரத்து 449 பேர் உள்ளனர். அவர்களுக்கு 90 நடமாடும் மருத்துவக் குழுக்கள் மற்றும் பள்ளி சுகாதார மருத்துவ குழுக்கள் மூலம் 3 முதல் 4 நாட்களுக்குள் கொேரானா தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
ஒரு குழுவில் டாக்டர், தடுப்பூசி செலுத்துபவர், தரவு பதிவாளர், அங்கன் வாடி பணியாளர், பொறுப்பு ஆசிரியர் என மொத்தம் 5 பேர் இருப்பார் கள். மொத்தம் 90 குழுக்களுக்கு 450 பேர் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பொதுமக்கள் ஒத்துழைப்பு
நீலகிரியில் முதல் டோஸ் 5 லட்சத்து 17 ஆயிரத்து 947 பேர், 2-வது டோஸ் 4 லட்சத்து 96 ஆயிரத்து 827 பேர் என மொத்தம் 10 லட்சத்து 14 ஆயிரத்து 774 பேருக்கு கொேரானா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. மாவட்ட எல்லையில் உள்ள 8 சோதனை சாவடிகள் மற்றும் சுற்றுலா மையங்களில் தடுப்பூசி போடப்படுகிறது.
ரேஷன் கடைகளில் 2 டோஸ் செலுத்தியவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும் என்ற தகவல் தவறானது. பெற்றோர்கள் அனைவரும் தங்களது 15 வயது முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முகாமில் மாவட்ட வருவாய் அதிகாரி கீர்த்தி பிரியதர்ஷினி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
கோத்தகிரி
கோத்தகிரி பகுதியில் 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட பள்ளிக் குழந்தைகளுக்கு, அவர்களது பள்ளிகளுக்கு நேரில் சென்று தடுப்பூசி இடும் பணி தொடங்கியது. சுகாதாரத்துறை சார்பில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கோத்தகிரி பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நேரில் சென்று மாணவர்களுக்கு தடுப்பூசி போட்டனர்.
மேலும் பள்ளிகளுக்கு செல்லாத சிறுவர்-சிறுமிகள் அருகில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தங்களுடைய பெயர்களை பதிவு செய்து, தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.