தேனி மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வி திட்டம் 1,000 மையங்களில் தொடக்கம் மாணவ, மாணவிகளுக்கு மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு

தேனி மாவட்டத்தில் ‘இல்லம் தேடி கல்வி' திட்டம் 1,000 மையங்களில் தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாணவ, மாணவிகளுக்கு மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Update: 2022-01-03 14:52 GMT
தேனி:
கொரோனா ஊரடங்கு கால கட்டத்தில் பள்ளிகள் மூடப்பட்டு இருந்தது. அப்போது 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளிடம் ஏற்பட்ட கற்றல் இடைவெளி மற்றும் கற்றல் குறைபாடுகளை சரி செய்யும் வகையில் இல்லம் தேடி கல்வி திட்டத்தை தமிழக அரசு தொடங்கி உள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் தேனி மாவட்டத்தில் முதற்கட்டமாக 1,000 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்கள் நேற்று மாலை முதல் செயல்பட தொடங்கின. தேனி அருகே வடபுதுப்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள இல்லம் தேடி கல்வி திட்ட மையத்தை கலெக்டர் முரளிதரன் தொடங்கி வைத்தார். அப்போது அங்கு கல்வி கற்க வந்த மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் முரளிதரன், பெரியகுளம் எம்.எல்.ஏ. சரவணக்குமார் ஆகியோர் மாலை அணிவித்து உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.
இதில் கலெக்டர் பேசும்போது, "தேனி மாவட்டத்தில் 1,120 குடியிருப்புகளில் இந்த திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம். இத்திட்டத்தில் 674 தன்னார்வலர்கள் தொடக்க நிலை மையங்களுக்கும், 818 தன்னார்வலர்கள் உயர் தொடக்க நிலை மையங்களுக்கும் என மொத்தம் 1,492 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். முதற்கட்டமாக மாவட்டத்தில் இன்று 1,000 மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த மையங்களுக்கு தேவையான கரும்பலகை, நோட்டு, புத்தகங்கள், எழுதுபொருட்கள் போன்றவை வழங்கப்பட்டுள்ளன" என்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல் முருகன், வடபுதுப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ரேணுகா பாலமுருகன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். அதுபோல், மாவட்டம் முழுவதும் இல்லம் தேடி கல்வி திட்ட மையங்களில் மாணவ, மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்