தூத்துக்குடியில் விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை
தூத்துக்குடியில் பலத்த காற்று காரணமாக விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை.;
தூத்துக்குடி:
தென்தமிழக கடற்கரையையொட்டி நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் மன்னார் வளைகுடா, தென்மேற்கு வங்கக்கடல் ஒட்டிய இலங்கை பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக லேசான மழை பெய்தது.
நேற்று தூத்துக்குடி, காயல்பட்டினம், வேடநத்தம், கீழ அரசடியில் 3 மில்லி மீட்டர், ேகாவில்பட்டி, விளாத்திகுளத்தில் 2 மி.மீ., வைப்பார், கயத்தாறில் 5 மி.மீ., கடம்பூரில் 22 மி.மீ. எட்டயபுரத்தில் 8.1 மி.மீ., ஸ்ரீவைகுண்டத்தில் 9.2 மி.மீ. மழை பெய்து உள்ளது.
மேலும் மன்னார் வளைகுடா, கன்னியாகுமரி கடல் பகுதியில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதன்படி தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் உள்ள சுமார் 245 விசைப்படகுகளும் மீன்பிடிக்க செல்லவில்லை. அனைத்து படகுகளும் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.