ஒமைக்ரான் மிக வேகமாக பரவுகிறது, மதுரையில் 16 பேருக்கு பாதிப்பு

ஒமைக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவுகிறது. மதுரையில் 16 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று கலெக்டர் அனிஷ் சேகர் கூறினார்.

Update: 2022-01-03 13:35 GMT
மதுரை, 
ஒமைக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவுகிறது. மதுரையில் 16 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று கலெக்டர் அனிஷ் சேகர் கூறினார்.
தடுப்பூசி
நாடு முழுவதும் 15 வயது முதல் 18 வயது வரை உள்ள சிறுவர், சிறுமியர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கி உள்ளது. தமிழகத்தில் இந்த திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார். மதுரையில் மாநகராட்சி இளங்கோ மேல் நிலை பள்ளியில் சிறார்களுக்கு தடுப்பூசி போடும் பணியினை மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் முன்னிலையில் கலெக்டர் அனிஷ் சேகர் தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:- மதுரை மாவட்டத்தில் சுமார் 1 லட்சத்து 41 ஆயிரம் சிறார்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு கண்டறியப்பட்டு உள்ளனர். இந்த சிறார்களுக்கான கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் பணியானது ஒரு வார காலத்திற்குள் முடிக்கப்படும். 
முகாம்
மதுரை மாவட்டத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் ஆகிய அனைத்து பள்ளிகளிலும் சிறார் களுக்கான கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் முகாம் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. 
மதுரை மாவட்டத்தில் கொரோனா முதல் தவணையை செலுத்திக் கொண்டர்களின் எண்ணிக்கை 80.2 சதவீத மாகவும், கொரோனா 2-ம் தவணையை செலுத்திக் கொண்டர்களின் எண்ணிக்கை 47.5 சதவீதமாகவும் உள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட வர்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டுப் பார்க்கையில் மதுரை மாவட்டமானது பின் தங்கிய நிலையில் உள்ளது.
வேகமாக பரவுகிறது
தமிழகத்தில் ஒமைக்ரான் வைரஸ் நோய்த்தொற்று அதிகமாக பரவுவதற்கு வாய்ப்பு உள்ளது. மதுரை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக ஒமைக்கரான் வைரஸ் நோய்த்தொற்றால் 3 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். ஆனால் இன்றைக்கு 16 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒமைக்ரான் வைரஸ் நோய் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக் கையாக போதுமான படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. ஒமைக்ரான் வைரஸ், டெல்டா வைரஸை விட 4 மடங்கு வேகத்தில் பரவுவதற்கு வாய்ப்பு உள்ளது. 
எனவே பொது இடங்களில் கூடுபவர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அதேபோல் கொரோனா தடுப்பூசி முதல் தவணை மற்றும் 2-ம் தவணை செலுத்திக் கொள்ளாதவர்கள் கண்டிப்பாக தடுப்பூசி செலுத்திக் கொண்டு தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
அபராதம்
 முகக்கவசம் அணியாமல் இருந்தால் வருவாய்த்துறை, பஞ்சாயத்துத்துறை அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் மூலம் கண்டறிப்பட்டு அபராதங்கள் விதிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன், துணை இயக்குனர் செந்தில்குமார், நகர்நல அலுவலர் ராஜா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்