தொட்டில் கயிறு கழுத்தை இறுக்கியதில் தொழிலாளி பலி

திருச்சியில் பேரக்குழந்தைக்கு கட்டிய தொட்டிலில் மதுபோதையில் அமர்ந்து ஆடியபோது கயிறு கழுத்தை இறுக்கி தொழிலாளி பலியானார்.

Update: 2022-01-03 13:17 GMT
பொன்மலைப்பட்டி, ஜன.4-
திருச்சியில் பேரக்குழந்தைக்கு கட்டிய தொட்டிலில் மதுபோதையில் அமர்ந்து ஆடியபோது கயிறு கழுத்தை இறுக்கி தொழிலாளி பலியானார்.
துப்புரவு தொழிலாளி
திருச்சி, அரியமங்கலம் மலையப்ப நகர் காந்திஜி தெருவை சேர்ந்தவர் லிங்கன் (வயது 40). இவர் தஞ்சாவூரில் துப்புரவு ஒப்பந்த பணியாளராக வேலை பார்த்து வந்தார். கடந்த நவம்பர் மாதம் 18-ந் தேதி இவரது மனைவி இறந்து விட்டார். அது முதல் மிகுந்த மனவேதனையில் இருந்தார்.
இந்த நிலையில் இவரது குடும்பத்தினர் நேற்று  வெளியே சென்று விட்டனர். வீட்டில் தனியாக இருந்த அவர் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
தொட்டில் கயிறு இறுக்கியது
அப்போது, வீட்டில் தனது பேரக்குழந்தையின் தொட்டில் அவிழ்க்கப்படாமல் தொங்கிய நிலையில் கிடந்தது. பேரக்குழந்தை தூங்கும் தொட்டிலில் தானும் தலைவைத்து ஆட லிங்கனுக்கு ஆசை எழுந்தது.
எனவே, தொட்டிலில் தலையை மட்டும் வைத்து ஆடியபடி இருந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக தொட்டிலில் கட்டிய கயிறு அவரின் கழுத்தை இறுக்கியுள்ளது. இதனால் லிங்கன் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளார்.
குடும்பத்தினர் அதிர்ச்சி
இந்த நிலையில் வெளியே சென்ற குடும்பத்தினர் மாலை வீடு திரும்பினர். அங்கு வீட்டில் தொட்டிலில் கழுத்து இறுகிய நிலையில் லிங்கன் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் அரியமங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில், அவர் மதுபோதையில், தொட்டிலில் தலையை வைத்து ஆடியபோது கழுத்து இறுக்கி இறந்தது தெரியவந்துள்ளது.
--------

மேலும் செய்திகள்