இந்தி நடிகர் ஜான் ஆபிரகாம்-மனைவிக்கு கொரோனா
இந்தி நடிகர் ஜான் ஆபிரகாம், அவரது மனைவி பிரியா ருன்சாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.;
மும்பை,
இந்தி நடிகர் ஜான் ஆபிரகாம், அவரது மனைவி பிரியா ருன்சாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
ஜான் ஆபிரகாம், மனைவி
மும்பையில் கட்டுப்பாட்டில் இருந்த கொரோனா வைரஸ், தற்போது வேகமாக பரவி வருகிறது. நேற்று முன்தினம் ஒரேநாளில் நகரில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டனர். பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா துறையினரும் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில் நேற்று இந்தி நடிகர் ஜான் ஆபிரகாம் மற்றும் அவரது மனைவி பிரியா ருன்சாலுக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து ஜான் ஆபிரகாம் இன்ஸ்டாகிராம் வலைத்தள பதிவில், “3 நாட்களுக்கு முன் நான் தொடர்பில் இருந்தவருக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது. இந்தநிலையில் எனக்கும், பிரியாவுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாங்கள் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டோம். எனவே யாருடனும் தொடர்பில் இல்லை. 2 பேரும் தடுப்பூசி போட்டு இருக்கிறோம். லேசான அறிகுறிகள் உள்ளது. முககவசம் அணிந்து, ஆரோக்கியமாக மற்றும் நலமாக நீங்கள் இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
ஏக்தா கபூர்
இதேபோல சினிமா, டி.வி. நிகழ்ச்சி தயாரிப்பாளரான ஏக்தா கபூரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்த தகவலை அவர் சமூகவலைதளத்தில் தெரிவித்து உள்ளார். அதில், "முன்எச்சரிக்கையாக இருந்த போதும், எனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் நலமாக உள்ளேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன்" என கூறியுள்ளார்.
---