சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது
தூத்துக்குடி மாவட்டத்தில் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நேற்று தொடங்கியது
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நேற்று தொடங்கியது.
கொரோனா தடுப்பூசி
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கும் கோவேக்சின் கொரோனா தடுப்பூசியை செலுத்த அரசு அனுமதி அளித்து உள்ளது. அதன்படி நேற்று சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டது.
தூத்துக்குடி சுப்பையா வித்யாலயா மகளிர் மேல்நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் கலந்து கொண்டு, பணியை தொடங்கி வைத்தார். மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ முன்னிலை வகித்தார். தொடர்ந்து மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
பின்னர் கலெக்டர் செந்தில்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-
81 ஆயிரம் மாணவர்கள்
தமிழக முதல்-அமைச்சர், 15 முதல் 18 வயது உள்ள மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்கி வைத்து உள்ளார். அதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 335 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 15 முதல் 18 வயது உள்ள 81 ஆயிரம் மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.
இந்த பணியை தூத்துக்குடி மாவட்ட பொது சுகாதாரத்துறையும், கல்வித்துறையும் இணைந்து அந்தந்த பள்ளி வளாகத்திலேயே மருத்துவக் குழுக்கள் மற்றும் ஆசிரியர்கள் மேற்பார்வையில் மேற்கொள்ள உள்ளது. இந்த பணிகளை 14 நாட்களில் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
தடுப்பூசி
மாவட்டத்தில் சுமார் 18 லட்சம் மக்கள் உள்ளனர். இதில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 15 லட்சத்து 40 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்களில் 13 லட்சத்து 13 ஆயிரத்து 833 பேருக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இதில் 7 லட்சத்து 8 ஆயிரத்து 523 பேர் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தி உள்ளனர். எனவே பள்ளி மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் இந்த கொரோனா தடுப்பூசி முகாமை பயன்படுத்தி தங்கள் பிள்ளைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி, கொரோனா நோய்த்தொற்றில் இருந்து அவர்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் பொற்செல்வன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பால தண்டாயுதபாணி, மாநகர நல அலுவலர் வித்யா, சுப்பையா வித்யாலயா மகளிர் மேல்நிலைப்பள்ளி செயலாளர் முரளிகணேஷ், தலைமை ஆசிரியர் சாந்தினி கவுசல் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.