புத்தாண்டை கொண்டாடிவிட்டு மோட்டார்சைக்கிளில் சென்ற மருந்துக்கடை உரிமையாளர் விபத்தில் சாவு- இறப்பில் சந்தேகம் என போலீசில் மனைவி புகார்
பவானி அருகே புத்தாண்டை கொண்டாடிவிட்டு மோட்டார்சைக்கிளில் சென்ற மருந்துக்கடை உரிமையாளர் விபத்தில் இறந்தார். அவரது இறப்பில் சந்தேகம் என போலீசில் மனைவி புகார் அளித்துள்ளார்.;
பவானி
பவானி அருகே புத்தாண்டை கொண்டாடிவிட்டு மோட்டார்சைக்கிளில் சென்ற மருந்துக்கடை உரிமையாளர் விபத்தில் இறந்தார். அவரது இறப்பில் சந்தேகம் என போலீசில் மனைவி புகார் அளித்துள்ளார்.
மருந்துக்கடை உரிமையாளர்
பவானி அருகே உள்ள மயிலம்பாடி கொண்டு ரெட்டிபாளையம் பகுதியில் வசித்து வருபவர் பெரியசாமி. இவருடைய மகன் பூபதி (வயது 36). இவர் மயிலம்பாடி பகுதியில் மருந்து கடை நடத்தி வந்தார். இவருக்கு திருமணமாகி பிரவீனா (30) என்கிற மனைவியும், சஹானா (9), ஸ்ரீனா (4) ஆகிய 2 மகள்களும் உள்ளனர்
இந்த நிலையில் பூபதியின் தாய் உடல்நலக்குறைவால் திருச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடன் பிரவீனா தங்கியிருந்தார். நேற்று முன்தினம் இரவு புத்தாண்டை முன்னிட்டு பிரவீனா தன் கணவரை செல்போனில் தொடர்புகொண்டு வீடியோ காலில் பேசியுள்ளார்.
சாவு
இந்தநிலையில் பூபதி கொண்டுசெட்டிபாளையம் பகுதியில் தனது நண்பர்களுடன் புத்தாண்டை கொண்டாடிவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். செட்டியார் தோட்டம் அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக அவர் ரோட்டோர பள்ளத்தில் தவறி விழுந்தார். இதில் காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் பவானி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, பூபதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசில் புகார்
இதுபற்றி அறிந்ததும் பிரவீனாவும், பூபதியின் தாயும் பவானி விரைந்தனர். பின்னர் இதுபற்றி பிரவீனா பவானி போலீசில் புகார் கொடுத்தார். அதில் அவர் ‘எனது கணவர் சாவில் சந்தேகம் உள்ளது. அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முருகையா, சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.