தொடர் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் தொடர் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
தொடர் மழை
வடகிழக்கு பருவமழை நிறைவடையும் தருவாயில், நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலான மழை பெய்து வருகிறது. நேற்று 4-வது நாளாகவும் தொடர்ந்து மழை பெய்தது. நெல்லையில் காலை முதலே வானம் மேகமூட்டமாக காட்சி அளித்தது. அவ்வப்போது லேசானது முதல் கன மழை வரை விட்டு விட்டு பெய்தது.
இதனால் நெல்லையில் தாழ்வான பகுதிகளில் மீண்டும் தண்ணீர் தேங்கியது. சந்திப்பு பஸ் நிலைய வடக்கு பகுதி உள்ளிட்ட ரோடுகளில் தேங்கிய தண்ணீரில் வாகனங்கள் ஊர்ந்து செல்வது போல் சென்றன.
நீர்வரத்து அதிகரிப்பு
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் பெய்த தொடர் மழையால், அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.
பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்று காலையில் நீர்வரத்து வினாடிக்கு 1,262 கன அடியாக அதிகரித்தது. அணையில் இருந்து பாசனத்துக்காக வினாடிக்கு 905 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணையில் நீர்மட்டம் 133.90 அடியாக இருந்தது. இதனுடன் இணைந்த சேர்வலாறு அணை நீர்மட்டம் 138.65 அடியாக உள்ளது.
118 அடி உயரம் கொண்ட மணிமுத்தாறு அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையில் நீர்மட்டம் 116.65 அடியாக உள்ளது. அணைக்கு 300 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்று நீர்வரத்து 656 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து பாசனத்துக்கு வினாடிக்கு 260 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.
இதே போல் கொடுமுடியாறு, வடக்கு பச்சையாறு, நம்பியாறு உள்ளிட்ட அணைகளுக்கும் நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளது.
மழை அளவு
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-
பாபநாசம்-12, சேர்வலாறு-48, மணிமுத்தாறு-40, சேரன்மாதேவி-30, நாங்குநேரி-22, களக்காடு-26, மூலைக்கரைப்பட்டி-3, பாளையங்கோட்டை-3, நெல்லை-4, கடனாநதி-10, ஆய்க்குடி-3, தென்காசி-2.