அனுமன் ஜெயந்தி விழா கொண்டாட்டம் ஆஞ்சநேயர் கோவில்களில் திரளான பக்தர்கள் வழிபாடு

அனுமன் ஜெயந்தி விழா கொண்டாட்டம்

Update: 2022-01-02 21:12 GMT
நெல்லை:
அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் திரளான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
அனுமன் ஜெயந்தி
ஆஞ்சநேயர் அவதரித்த தினமான நேற்று அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
நெல்லை அருகே உள்ள அருகன்குளம் காட்டு ராமர் கோவிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி பூஜைகள் நடைபெற்றது. காலை 9 மணிக்கு கும்பம் வைத்து ஹோமம், 10.30 மணிக்கு அபிஷேகமும், 11.30 மணிக்கு பரத நாட்டியம், மதியம் மகா தீபாராதனையும் நடந்தது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 5 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
ராமர்-சீதா திருக்கல்யாணம்
நெல்லை சந்திப்பு கெட்வெல் சஞ்சீவி வரத ஆஞ்சநேயர் கோவிலில் காலை, மாலையில் புஷ்பங்கி ராஜ அலங்காரம், சிறப்பு ஆராதனை, கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது.
நெல்லை அருகே உள்ள சுத்தமல்லி ஜெய் மாருதி ஞான தர்ம பீடத்தில் அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்றது. காலை 4 மணிக்கு கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்களும், 9 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், 9.30 மணிக்கு 108 தேங்காய்களை கொண்டு ஆஞ்சநேயர் ஹோமமும், அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு ராமர் -சீதா திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது.
எட்டெழுத்து பெருமாள்
நெல்லை அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவிலில் அனுமன் ஜெயந்தியையொட்டி நேற்று மாலையில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகமும், பழ அலங்கார காப்பும் நடந்தது. இதைதொடர்ந்து இரவில் ஆஞ்சநேயருக்கு புஷ்பாஞ்சலி நடந்தது. நெல்லை வடக்கு புறவழிச்சாலையில் உள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் ே்காவிலில் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
அம்பை
அம்பை தாமிரபரணி நதிக்கரை அருகில் காசிநாதர் கோவில் பின்புறம் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று அனுமன் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
முன்னதாக சாமிக்கு காலையில் பால், தயிர், இளநீர், விபூதி, சந்தனம் உள்ளிட்டவையால் அபிஷேகங்கள் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் இருந்த ஆஞ்சநேயருக்கு பூஜைகள் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அம்பை ஆஞ்சநேய பக்தர்கள் பேரவையினர் செய்திருந்தனர். கொேரானா விதிகளுக்குட்பட்டு பக்தர்கள் முக கவசத்துடன் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
வள்ளியூர்
வள்ளியூர் சுந்தர பரிபூரண பெருமாள் கோவில் வளாகத்தில் நின்ற கோலத்தில் ராமபக்த ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
நேற்று அனுமன் ஜெயந்தியையொட்டி 9 கிரகங்களின் அதிபதியாகிய ஆஞ்சநேயருக்கு பன்னீர், இளநீர், பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டது.
பின்பு ஆஞ்சநேயர் சாமிக்கு பழங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை, பூஜை நடந்தது. இதில் வள்ளியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
தென்காசி மாவட்டம் ஊத்துமலை மலை அடிவாரம் அனுமந்தபுரி ராமபக்த ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்றது. காலை 7.15 மணிக்கு நவக்கிரஹ சுதர்சன ஆஞ்சநேய மூல மந்திர ஜெப ஹோமம், அர்ச்சனை, சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. 
அதைத்தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

மேலும் செய்திகள்