தண்ணீர் திறப்பு குறைப்பு: மேட்டூர் அணையின் நீர்மட்டம் மீண்டும் உயர்கிறது
தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டு உள்ளதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் மீண்டும் உயர்கிறது.
மேட்டூர்:
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தண்ணீர் திறப்பு பாசன தேவையை கருத்தில் கொண்டு அதிகரித்தும், குறைத்தும் திறக்கப்படுகிறது. தற்போது டெல்டா மாவட்டங்களில் கணிசமாக மழை பெய்து வருகிறது. இதனால் பாசனத்துக்கு தண்ணீர் தேவை குறைந்துள்ளது. எனவே மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு கடந்த 30-ந் தேதி வினாடிக்கு ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது. கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 600 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 138 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவை விட, அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் மீண்டும் உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 115.86 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று சற்று உயர்ந்து, 115.99 அடியாக இருந்தது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் மீண்டும் உயர தொடங்கியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.