காங்கிரசின் ஊழல், பிரித்தாளும் கொள்கையை மக்கள் நம்ப மாட்டார்கள் - சி.டி.ரவி எம்.எல்.ஏ. பேட்டி
காங்கிரசின் ஊழல், பிரித்தாளும் கொள்கையை மக்கள் நம்ப மாட்டார்கள் என்று சி.டி.ரவி எம்.எல்.ஏ. கூறினார்.
பெங்களூரு:
பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி எம்.எல்.ஏ. பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
காங்கிரசார் எதிர்க்கிறார்கள்
காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை மக்களின் உணர்வுகளை மதிப்பது இல்லை. காலத்திற்கு ஏற்றவாறு மாறும் தன்மை அக்கட்சிக்கு இல்லை. பா.ஜனதா கொண்டு வரும் எல்லா திட்டங்களையும் அக்கட்சி கண்ணை மூடிக்கொண்டு எதிர்க்கிறது. இது மகாத்மா காந்தி காங்கிரஸ் அல்ல, சோனியா காந்தி காங்கிரஸ். கடந்த 2014, 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டசபை-நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளை பார்த்து காங்கிரஸ் பாடம் கற்றதாக தெரியவில்லை.
காங்கிரசின் ஊழல், பிரித்தாளும் கொள்கையை மக்கள் நம்ப மாட்டார்கள். காங்கிரசை இந்துக்கள் நம்பும் நிலையில் இல்லை. பசுவதை தடை சட்டம், மதமாற்ற தடை சட்டத்தை காங்கிரசார் அரசியல் நோக்கத்திற்காக எதிர்க்கிறார்கள். அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களை விடுவிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதையும் காங்கிரசார் எதிர்க்கிறார்கள்.
மதசார்பின்மை
ஆங்கிலேயர்கள், அவுரங்கசீப்புக்கு கோவில் வருமானம் தேவைப்பட்டது. கோவில்கள் சமுதாயத்தின் சொத்து. மதசார்பின்மை பெயரில் பெரும்பான்மை மக்களின் உணர்வுகளை அவமதிப்பது சரியல்ல. கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமைவதற்கு முன்பு 6 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சி இருந்தது. அப்போது மேகதாது திட்ட பணிகளை தொடங்காமல் இருந்தது ஏன்?.
இப்போது தனது அரசியல் செல்வாக்கை உயர்த்தி கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் டி.கே.சிவக்குமார் பாதயாத்திரை மேற்கொள்கிறார். மேகதாது திட்டத்திற்கு மத்திய அரசு நிர்வாக ஒப்புதலை வழங்கியுள்ளது. சுற்றுச்சூழல் துறையின் ஒப்புதல் கிடைக்க வேண்டியுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த அரசு உறுதி பூண்டுள்ளதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
போட்டியில் இல்லை
நிலைமை இவ்வாறு இருக்க பாதயாத்திரை நடத்துவது ஏன் என்பது குறித்து டி.கே.சிவக்குமார் மாநில மக்களுக்கு விளக்க வேண்டும். நான் எந்த பதவிக்கான போட்டியிலும் இல்லை. எங்கள் கட்சி தலைமை என்ன சொல்கிறதோ அதை செய்கிறேன். ஒரு சமூகத்தின் அடையாளத்தை அழித்து இன்னொரு சமூகத்தின் அடையாளத்தை நிறுவும்போது தான் மோதல் ஏற்படுகிறது. ஆர்.எஸ்.எஸ். தேசபக்தியை வளர்த்து வருகிறது. ஆனால் அந்த அமைப்பு மீது தவறான தகவலை வெளியிட்டு வருகிறார்கள்.
இவ்வாறு சி.டி.ரவி கூறினார்.