கொ.ம.தே.க. கலந்தாய்வு கூட்டம்: ஆத்தூரை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும்-ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ. பேச்சு
ஆத்தூரை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்று கொ.ம.தே.க. கலந்தாய்வு கூட்டத்தில் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ. கூறினார்.
சேலம்:
ஆத்தூரை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்று கொ.ம.தே.க. கலந்தாய்வு கூட்டத்தில் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ. கூறினார்.
கலந்தாய்வு கூட்டம்
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில், சேலம் மாவட்ட வளர்ச்சி திட்டங்கள் குறித்த கலந்தாய்வு கூட்டம் சேலத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். சேலம் மத்திய மாவட்ட செயலாளர் லோகநாதன் வரவேற்றார். நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், அமைச்சர் கே.என்.நேருவிடம் சேலம் மாவட்ட மக்களின் கோரிக்கைகள் அடங்கிய புத்தகத்தை வழங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
சேலம் மாவட்ட மக்களின் கோரிக்கைகள் ஒரு புத்தகமாக அமைச்சர் கே.என்.நேருவிடம் வழங்கப்பட்டு உள்ளது. அப்படியானால் கடந்த 10 ஆண்டுகளாக மாவட்டத்தில் என்ன வளர்ச்சி நடந்தது. மேம்பாலங்கள் கட்டப்பட்டதால் பெங்களூருவுக்கு வேண்டும் என்றால் வேகமாக செல்லலாம். அதனால் சேலம் மக்களுக்கு என்ன பயன். வருகிற உள்ளாட்சி தேர்தலில் சேலம் மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி முழுவதும் வெற்றி பெற தி.மு.க.வுக்கு முழு ஆதரவு தரப்படும். இன்னும் 2 ஆண்டுகளில் விண்ணப்பிக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் உடனுக்குடன் மின் இணைப்பு கொடுக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதற்காக பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு வருகிறது.
புதிய மாவட்டம்
சேலம், நாமக்கல், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் குறைவானவர்களுக்கே நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. இதில் உண்மை நிலையை கண்டறிந்து, அதிகம் பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி வழங்க வேண்டும். திருமணிமுத்தாற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும். காவிரியாற்று உபரி நீரை வசிஷ்ட நதியில் கலக்கும் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்.
மேட்டூர் அணையின் மேல் புறத்தில் உள்ள கொளத்தூர் பகுதி மக்களுக்கு குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மரவள்ளிக்கிழங்கு உள்ளிட்ட அனைத்து விவசாயிகளுக்கும் நிரந்தர வருமானம் கிடைக்க வேண்டும். சேலம் மாவட்டத்தை 2-ஆக பிரித்து ஆத்தூரை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தீர்மானங்கள்
கூட்டத்தில் சேலம் மாநகரில் ‘ஆட்டோ நகர்' அமைக்க வேண்டும். இரும்பாலை வளாகத்தில் பயன்பாட்டில் இல்லாத காலி இடத்தில் ராணுவ தளவாட உற்பத்தி நிறுவனம் மற்றும் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும். செங்கல் சூளைக்கு மண் எடுக்க நிபந்தனையுடன் அனுமதி அளிக்க வேண்டும். தீரன் சின்னமலை முழு உருவ சிலை அமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மேற்கு மாவட்ட பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி, கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், கொ.ம.தே.க. மாநில துணைப்பொதுச்செயலாளர் தங்கவேல், இளைஞர் அணி செயலாளர் சூர்யமூர்த்தி, விவசாய அணி துணைச்செயலாளர் சந்திரசேகர், சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் ரமேஷ், தெற்கு மாவட்ட செயலாளர் சரவணன், புறநகர் மாவட்ட செயலாளர் ராஜ்குமார், வடக்கு மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ், மேற்கு மாவட்ட செயலாளர் சுப்ரமணி, வடக்கு மண்டல இளைஞர் அணி செயலாளர் விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நிர்வாகி ரத்தினவேல் நன்றி கூறினார்.