மண்டியா அருகே கார்-பஸ் மோதல்: தம்பதி உள்பட 3 பேர் சாவு
மண்டியா அருகே கார்-பஸ் மோதியதில் தம்பதி உள்பட 3 பேர் இறந்தனர். மடத்திற்கு சென்று விட்டு திரும்பிய போது விபத்து நடந்து உள்ளது.
பெங்களூரு:
3 பேர் சாவு
மண்டியா மாவட்டம் நாகமங்களா தாலுகா கெம்பனகொப்பலு கேட் அருகே நேற்று மதியம் ஒரு கார் சென்று கொண்டு இருந்தது. அப்போது அதே சாலையில் ஒரு பஸ்சும் வந்து கொண்டு இருந்தது. இந்த நிலையில், எதிர்பாராத விதமாக காரும், பஸ்சும் மோதிக் கொண்டது. இந்த கோர விபத்தில் கார் அப்பளம் போல நொறுங்கி சேதம் அடைந்தது. இந்த விபத்தில் காரில் இருந்த பெண்கள் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்கள்.
மற்றொரு சிறுமி படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினாள். தகவல் அறிந்ததும் நாகமங்களா புறநகர் போலீசார் விரைந்து வந்து சிறுமியை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். மற்ற 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மடத்திற்கு சென்றுவிட்டு...
போலிஸ் விசாரணையில், விபத்தில் பலியானவர்கள் குடகு மாவட்டம் சோமவார் பேட்டையை சேர்ந்த தங்கம்மா (வயது 55), சுதீப் (35), இவரது மனைவி ஸ்ரீஜா (31) என்று தெரிந்தது. அந்த சிறுமிக்கு 15 வயதாகிறது. இவர்கள் 4 பேரும் மண்டியாவில் உள்ள ஆதிசுஞ்சனகிரி மடத்திற்கு வந்துவிட்டு மைசூருவுக்கு சென்ற போது விபத்தில் சிக்கியது தெரியவந்தது.
பஸ், கார் டிரைவர்களின் கவனக்குறைவே விபத்திற்கு காரணம் என போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து நாகமங்களா புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.