திசையன்விளை அருகே ஓய்வுபெற்ற ஆசிரியர் வீட்டில் 50 பவுன் நகை கொள்ளை மேலும் 4 வீடுகளில் திருட முயற்சி;தம்பதி உள்பட 4 பேர் கைது

ஓய்வுபெற்ற ஆசிரியர் வீட்டில் நகை கொள்ளை

Update: 2022-01-02 20:55 GMT
திசையன்விளை:
திசையன்விளை அருகே ஓய்வுபெற்ற ஆசிரியர் வீட்டில் 50 பவுன் நகைகளை கொள்ளையடிக்கப்பட்டது. மேலும் 4 வீடுகளில் திருட முயற்சி நடந்தது. இதுதொடர்பாக தம்பதி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதுபற்றிய விவரம் வருமாறு:-
ஓய்வுபெற்ற ஆசிரியர்
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள இடையன்குடி பழைய கோவில் தெருவைச் சேர்ந்தவர் சைமன் (வயது 68). ஓய்வுபெற்ற ஆசிரியர். இவருடைய மகன்கள் டைட்டஸ், சைலஸ். இவர்கள் வெளியூரில் வசித்து வருகிறார்கள். புத்தாண்டு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்து இருந்தனர்.
  இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் அனைவரும் வீட்டில் உள்ள கீழ்தளம், மேல்மாடியில் உள்ள அறைகளில் தூங்கிக் கொண்டு இருந்தனர். ஆனால் மேல்மாடியில் உள்ள கதவை பூட்டாமல் இருந்தனர்.
50 பவுன் நகை கொள்ளை
நள்ளிரவில் வீட்டின் மேல்மாடி வழியாக மர்மநபர் உள்ளே புகுந்தார். அங்குள்ள அறையில் பீரோவை திறந்து அதில் இருந்த 50 பவுன் நகை, ரூ.80 ஆயிரத்தை கொள்ளையடித்தார். பின்னர் தரைத்தளத்திற்கு வந்த மர்மநபர், அங்கிருந்த அறைகளை திறக்க முயன்றார்.
  அப்போது, அங்கு தூங்கிக் கொண்டு இருந்தவர்கள் திடீரென்று கண் விழித்து, ‘திருடன்... திருடன்...’ என்று அலறினார்கள். இதையடுத்து மர்மநபர் அங்கிருந்த கைக்கெடிகாரத்தை திருடிவிட்டு தப்பி ஓடிவிட்டார். வீட்டில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்ததை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
போலீசார் விரைந்தனர்
இதுகுறித்து உடனடியாக உவரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் செல்வி, சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
 மேலும் நெல்லையில் இருந்து கைரேகை நிபுணர் ரமணி தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து ரேகைகளை பதிவு செய்தனர். கொள்ளை போன நகைகளின் மதிப்பு சுமார் ரூ.12½ லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
4 வீடுகளில் திருட்டு முயற்சி
மேலும் சம்பவம் நடந்த அதே இரவில் இடையன்குடி தோப்பு தெருவைச் சேர்ந்த சுந்தர் சிங், பிளசிங் தெருவைச் சேர்ந்த ஜெபா, கோவில் தெருவைச் சேர்ந்த கோல்டன் டேனியல், பீட்டர் தெருவைச் சேர்ந்த ரமேஷ் ஆகியோர் வீடுகளிலும் அடுத்தடுத்து மர்மநபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்டனர்.
  இதில் ரமேஷ் என்பவர் வீட்டில் நடந்த திருட்டு முயற்சியானது வீட்டில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அதில் மர்மநபர் நைட்டியை கைலி போல் மடித்து கட்டியபடி தலையில் துண்டு கட்டிக் கொண்டு சட்டை அணியாமல் நுழைவதும், வீட்டில் நடமாடுவதும் பதிவாகி இருந்தது.
மினிலாரி பறிமுதல்
இதற்கிடையே இடையன்குடி- ஆனைகுடி விலக்கில் கேட்பாரற்று நின்ற மினி லாரியை போலீசார் கைப்பற்றி உள்ளனர். ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் மினி லாரியில் வந்து, ஒவ்வொரு வீட்டிற்கும் தனித்தனியாக சென்று இந்த சம்பவங்களில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர்.
  இந்த சம்பவங்கள் குறித்து உவரி போலீசார் வழக்குப்பதிவு ெசய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வந்தனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
4 பேர் கைது
போலீசாரின் விசாரணையில், தென்காசி மாவட்டம் தட்டான்பட்டியைச் சேர்ந்த ஆபிரகாம் (65), அவருடைய மகன்கள் பெஞ்சமின் (33), ஈசாக் (31), பெஞ்சமின் மனைவி காளிஸ்வரி (30) ஆகிய 4 பேரும் சேர்ந்து இடையன்குடியில் சைமன் வீட்டில் நகை-பணம் கொள்ளையடித்ததும், மேலும் 4 பேரின் வீடுகளில் திருட்டு முயற்சியில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.
  இதையடுத்து ஆபிரகாம் உள்ளிட்ட 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் 4 பேரும் திசையன்விளை அருகே உவரியில் கடந்த 2 ஆண்டுகளாக வாடகை வீட்டில் தங்கியிருந்து கூலி வேலை செய்து நோட்டமிட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
  மேலும் அவர்களுக்கு வேறு ஏதேனும் திருட்டு சம்பவங்களில் தொடர்பு உள்ளதா? என்றும், அவர்களுக்கு கூட்டாளிகள் யாரும் உதவினார்களா? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
  திசையன்விளை அருகே ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் 50 பவுன் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக தம்பதி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
  
  --------------------
(பாக்ஸ்) மர்மநபர் மீது இரும்பு கம்பியால் தாக்குதல்
திசையன்விளை அருகே இடையன்குடி பகுதியில் 4 வீடுகளில் அடுத்தடுத்து திருட்டு முயற்சி சம்பவம் நடந்தது. இதில் பீட்டர் தெருவை சேர்ந்த ரமேஷ் (வயது 49) என்பவரின் வீடும் அடங்கும். இந்த சம்பவம் குறித்து ரமேஷ் கூறியதாவது:-
  எங்கள் வீட்டில் நேற்று முன்தினம் இரவு மொட்டை மாடியில் மின்விளக்கு அமைக்கும் பணி நடந்து கொண்டு இருந்தது. அதை நான் பார்த்து கொண்டு இருந்தேன். எனது டிரைவர் பாலா வரவேற்பு அறையில் தூங்கிக்கொண்டு இருந்தார்.
  அப்போது எங்கள் வீட்டில் மர்மநபர் ஒருவர் புகுந்தார். வீட்டின் கீழ் உள்ள அறைகளுக்கு சென்று, அங்கு பீரோவை திறந்து பார்த்தார். ஆனால் அங்கு எதுவும் கிடைக்காததால் மாடியில் உள்ள அறைக்கு வந்தார். அங்கு என்னை கண்டதும் தப்பி ஓடினார். நான் அங்கு கிடந்த இரும்பு கம்பியால் மர்ம நபர் முதுகில் தாக்கினேன். அந்த சத்தம் கேட்டு டிரைவர் பாலாவும் அங்கு ஓடி வந்தார். மர்மநபரை பிடிக்க முயன்றும் தப்பி ஓடிவிட்டார்.
  இவ்வாறு அவர் கூறினார்.
............

மேலும் செய்திகள்