கொரோனா-ஒமைக்ரான் பரவல் அதிகரித்தால் கர்நாடகத்தில் மீண்டும் ஊரடங்கு - பசவராஜ் பொம்மை எச்சரிக்கை
கொரோனா-ஒமைக்ரான் பரவல் அதிகரித்தால் கர்நாடகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
பெங்களூரு:
கொரோனா 3-வது அலை
கர்நாடகத்தில் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பரவ தொடங்கியது. கொரொனா முதல் அலையால் பலரும் பாதிக்கப்பட்டனர். ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது. பின்னர் படிப்படியாக வைரஸ் பரவல் குறைந்தது. பின்னர் கொரோனா 2-வது அலை உருவெடுத்தது. பின்னர் 2-வது அலையும் கட்டுக்குள் வந்துவிட்டது. ஆனால் கடந்த ஒரு வாரமாக கொரோனா பரவல் மற்றும் ஒமைக்ரான் பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது.
நேற்று முன்தினம் தினசரி பாதிப்பு ஆயிரத்தை கடந்து பதிவானது. குறிப்பாக தலைநகர் பெங்களூருவில் கொரோனா மிக வேகமாக அதிகரித்து வருகிறது. கர்நாடகம் மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள பெருநகரங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் நாட்டில் கொரோனா 3-வது அலை தொடங்கி விட்டதாக மருத்துவ நிபுணர்கள் கருத்து கூறியுள்ளனர்.
கர்நாடகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் கடந்த டிசம்பர் மாதம் 28-ந் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இது வருகிற 7-ந் தேதி வரை அமலில் இருக்கும் என்று அரசு அறிவித்தது. அதன்படி இரவு 10 மணிக்கு கடைகள் அடைக்கப்பட்டு விடுகின்றன. இரவு 10 மணிக்கு தொடங்கி காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கிறது.
இரவு நேர ஊரடங்கு
இந்த நிலையில் கர்நாடகத்தில் கொரோனா-ஒமைக்ரான் பரவலை தடுக்க மீண்டும் ஊரடங்கை அமல்படுத்துவது தவிர்க்க முடியாது என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார். இதுகுறித்து அவர் பெலகாவியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் கொரோனா-ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இது வருகிற 7-ந் தேதி நிறைவடைகிறது. இரவுநேர ஊரடங்கை நீட்டிப்பது குறித்து 2 நாட்களில் முடிவு செய்யப்படும். அண்டை மாநிலங்களான மராட்டியம், தமிழகம், கேரளாவில் கொரோனா பரவல் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் அந்த மாநிலங்களின் எல்லை பகுதியில் தீவிரமாக கண்காணிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
ஊரடங்கு தவிர்க்க முடியாது
கொரோனா பரவலை தடுக்க அரசு விதிக்கும் கட்டுப்பாடுகளை பொதுமக்கள் மதித்து நடந்து கொள்ள வேண்டும். கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் அரசுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் ஊரடங்கை அமல்படுத்த மாட்டோம். ஒருவேளை பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்காவிட்டால், ஊரடங்கு அமல்படுத்தப்படும். இதனை தவிர்க்க முடியாது.
15 வயது முதல் 18 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நாளை(இன்று) தொடங்கப்படுகிறது. தகுதியான அனைவரும் தாமாக முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். மாநிலத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கும்படி சுகாதாரத்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை தயார் நிலையில் வைக்கும்படியும் அறிவுறுத்தி உள்ளேன். போதுமான அளவுக்கு மருந்துகள் கையிருப்பு உள்ளன.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.
நிபுணர் குழு பரிந்துரை
பசவராஜ் பொம்மையின் இந்த கருத்து மூலம் அடுத்து வரும் நாட்களில் கர்நாடகத்தில் மீண்டும் முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படுவது உறுதி என்பது தெரியவந்துள்ளது. கொரோனா பரவல் தீவிரமாக அதிகரித்தால், அனேகமாக மகர சங்கராந்தி பண்டிகைக்கு பிறகு ஊரடங்கு குறித்து அரசு முடிவு எடுக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்க சில கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று கோரி மாநில அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரைகளை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி கொரோனா பாதிப்பு விகிதம் 5 சதவீதத்தை தாண்டினால் அத்தகைய பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்த வேண்டும். மேலும் மஞ்சள், ஆரஞ்சு மற்றும் சிவப்பு என்று மூன்று வகையாக மண்டலங்களை பிரிக்க வேண்டும்.
அனைத்திற்கும் தடை
மஞ்சள் ‘லேசான பரவல்’, ஆரஞ்சு ‘மிதமான பரவல்’, சிவப்பு ‘அதிக பரவல்’ ஆகும். இந்த பகுதிகளில் பாதிப்புக்கு ஏற்ப கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. அதாவது மஞ்சள் மண்டலத்தில் திருமண நிகழ்ச்சிகளில் அதிகபட்சமாக 300 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும்.
இறுதிச்சடங்கில் 200 பேர் கலந்து கொள்ளலாம். ஆரஞ்சு மண்டலத்தில் வணிக வளாகங்கள், தனியார் நிறுவனங்கள், பள்ளிக்கூடங்கள், கடைகள் உள்ளிட்டவை காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே இயங்க அனுமதிக்க வேண்டும். சிவப்பு மண்டலத்தில் வணிக வளாகங்கள், தியேட்டர்கள், பூங்காக்கள், நீச்சல் குளங்கள், உடற்பயிற்சி கூடங்கள், போக்குவரத்து என அனைத்திற்கும் தடை விதிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.