சதுரகிரியில் அமாவாசை சிறப்பு வழிபாடு
சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோவிலில் அமாவாசையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
வத்திராயிருப்பு,
சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோவிலில் அமாவாசையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
மார்கழி மாத அமாவாசை
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. நேற்று மார்கழி மாத அமாவாசை என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய அதிகாலையிலேயே தாணிப்பாறை வனத்துறை கேட்டின் முன்பு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்தனர். காலை 6.45 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டது. பக்தர்களை வனத்துறையினர் முழுமையான பரிசோதனை செய்த பின்னரே பக்தர்கள் மலைப்பாதை வழியாக சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள பேச்சியம்மன் கோவில் அருகே உள்ள வழுக்குப் பாறையில் தண்ணீர் வருவதால் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் நீராடினர்.
சிறப்பு பஸ்கள்
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி, சந்தன மகாலிங்கம் சுவாமிகளுக்கு மார்கழி மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் அடிவார பகுதிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. நீர் ஓடை பகுதியில் பக்தர்களின் பாதுகாப்பிற்காக வனத்துறையினர், தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தாணிப்பாறை அடிவாரம் பகுதியில் வத்திராயிருப்பு போலீசார், மற்றும் சாப்டூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
பக்தர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்தனர்.