பி.எஸ்.என்.எல். ஊழியர் வீட்டில் திருட்டு முயற்சி
பி.எஸ்.என்.எல். ஊழியர் வீட்டில் திருட்டு முயற்சி நடந்தது.;
பெரம்பலூர்:
பெரம்பலூர்-துறையூர் சாலை கல்யாண் நகரை சேர்ந்தவர் சிவா (வயது 38). இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக கடந்த 10 ஆண்டுகளாக பணி புரிந்து வருவதால், ஈரோட்டில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இதனால் கல்யாண் நகரில் உள்ள வீட்டிற்கு எப்போதாவது அவர் வந்து செல்வார். இந்நிலையில் நேற்று காலை சிவா வீட்டு கதவின் தாழ்ப்பாள் உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்ட அக்கம், பக்கத்தினர் இதுகுறித்து சிவாவுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சிவா தனது நண்பர் விஜய்க்கு தகவல் தெரிவித்து வீட்டை பார்த்து வருமாறு கூறினார். அவர் சென்று சிவா வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த துணிகள் உள்ளிட்டவை சிதறி கிடந்ததை தவிர, பொருட்கள் ஏதும் திருட்டு போகவில்லை என்பது தெரியவந்தது. மேலும் இது பற்றி தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு திருட வந்த மர்மநபர்கள் சிவா வீட்டில் நகை-பணம் ஏதும் இல்லாததால் திரும்பி சென்றது, போலீசார் விசாரணையில் தெரியவந்தது. திருட்டு முயற்சியில் ஈடுபட்டவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.