கோவில்களில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்

கோவில்களில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

Update: 2022-01-02 20:19 GMT
தா.பழூர்:

அனுமன் ஜெயந்தி விழா
அனுமன் பிறந்த நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் அமாவாசை சேர்ந்து வரும் அனுமன் ஜெயந்தி நாள் மிகவும் உன்னதமான நாளாக போற்றப்படுகிறது. இதையொட்டி நேற்று தா.பழூர் கடைவீதியில் உள்ள பால ஆஞ்சநேயர் சுவாமி கோவிலில் சுவாமிக்கு மஞ்சள் பொடி, திரவிய பொடி, சந்தனம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களை கொண்டு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. சஞ்சீவிராயர் என்றும், பால ஆஞ்சநேயர் என்றும் போற்றி வழிபடப்படும் மூலவருக்கும், பிரகாரத்தில் உள்ள பிரகார ஆஞ்சநேயருக்கும், எழுந்தருளி சுவாமிக்கும் நடைபெற்ற சிறப்பு திருமஞ்சனத்திற்கு பிறகு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டது.
மாருதி கவசம், அனுமன் சாலிசா, அனுமன் சகஸ்ரநாமம் ஆகியவை உச்சாடனம் செய்யப்பட்டு மலர்கள் கொண்டு அர்ச்சனை செய்து வழிபாடுகள் நடைபெற்றன. மங்கள ஆரத்தி உள்ளிட்ட சகல உபசாரங்களும் செய்யப்பட்டது. பின்னர் மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் தா.பழூர் வட்டாரத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி கலந்து கொண்டனர். ஒவ்வொரு ஆண்டும் 3 நாட்கள் சிறப்பாக அனுமன் ஜெயந்தி விழா நடைபெறுவது வழக்கம். ஆனால் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக ஒரு நாள் மட்டும் பூஜைகள் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
உடையார்பாளையம்
உடையார்பாளையத்தில் கீரைக்கார தெருவில் உள்ள சஞ்சீவிராயர் ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி சஞ்சீவிராயர் ஆஞ்சநேயருக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், திரவிய பொடி, இளநீர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் ஆஞ்சநேயருக்கு வஸ்திரம் சாற்றப்பட்டு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் வடைமாலை மற்றும் வெற்றிலை மாலை அணிவித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதேபோல் உடையார்பாளையம் ராஜவீதியில் உள்ள கோவிலில் பக்த ஆஞ்சநேயருக்கும், கருடகம்ப தெருவில் உள்ள கோவிலில் கருடகம்ப ஆஞ்சநேயருக்கும், வேலப்பன் செட்டி ஏரிக்கரை அருகில் உள்ள கோவிலில் பஞ்சமுக ஆஞ்சநேயருக்கும் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.

மேலும் செய்திகள்