சாலையில் உள்ள பள்ளத்தால் விபத்து; தொழிலாளி சாவு

தக்கலை அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் சிக்கி கவிழ்ந்ததால் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-01-02 20:16 GMT
பத்மநாபபுரம்:
தக்கலை அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் சிக்கி கவிழ்ந்ததால் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
தொழிலாளி
தக்கலை அருகே உள்ள பிலாங்காலை பகுதியை சேர்ந்தவர் ஜாண்சன் (வயது 66) கூலி தொழிலாளி. இவர் சம்பவத்தன்று தக்கலையில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். 
தக்கலை பனவிளை பகுதியை கடந்து சென்று கொண்டிருந்த போது சாலையில் பள்ளங்கள் இருந்தன. அவற்றில் மோட்டார் சைக்கிள் சிக்கி கீழே விழுந்தது. இதில் ஜாண்சன் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.
பரிதாப சாவு
அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று ஜாண்சன் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது  உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில்-களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பள்ளங்களால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. எனவே, சாலையை விரைவில் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்